குட் பேட் அக்லி எப்படியிருக்கு..

10 சித்திரை 2025 வியாழன் 14:28 | பார்வைகள் : 413
பிரபல டான் ஆக இருக்கும் அஜித்தை அவரது மனைவி திரிஷா, மகன் பிறந்ததும் திருந்தி வாழ சொல்கிறார். இதனால் அஜித்தும் மனம் திருந்தி போலீசில் சரணடைந்து மும்பை சிறையில் 17 ஆண்டுகள் இருக்கிறார். அப்பா சிறையில் இருக்கிறார் என தெரியாமல் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு அப்பா வருவார் என எதிர்பார்த்து இருக்கும் அஜித் மகனுக்கு 18வது பிறந்தநாள் வருகிறது. ஸ்பெயினில் வசிக்கும் மனைவியையும், மகனையும் பார்ப்பதற்காக ஜெயிலில் இருந்து முன்கூட்டியே விடுதலை ஆகி வரும் அஜித்துக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அவருடைய மகன் சர்வதேச போலீசாரால் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறார். அவர் எதற்காக சிறை சென்றார், அவரை வழக்கில் சிக்க வைத்தது யார், அதன் பின்னணி என்ன, ஜெயிலில் இருந்து மகனை அஜித் காப்பாற்றினாரா என்பதே படத்தின் மீதி கதை.
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ், பேட்ட படத்தை ஒரு பேன் பாய் போன்று இயக்கியிருப்பார். விக்ரம் படத்தில் கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜும் இதையே செய்திருப்பார். அதேப்போல் அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தை ஏகே டிரிப்யூட் ஆக அஜித் ரசிகர்களை எப்படி எல்லாம் திருப்திபடுத்த முடியுமோ அப்படி எல்லாம் அவரை பலவித கெட்டப்புகளில் காட்டி ரசிக்க வைத்துள்ளார். படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும் அதிரடி ஆக்ஷன் கலந்தும், கார் ரேஸ் வேகத்தில் நகர்த்தி கொண்டு சென்றுள்ளார் ஆதிக்.
தியேட்டரில் ஸ்கிரீன் கிழியும் அளவுக்கு அறிமுக காட்சியிலேயே அதிரடியாக களம் இறங்கிய அஜித், சகலகலா வல்லவன் படத்தின் இளமை இதோ இதோ பாடல் பின்னணியில் சண்டை காட்சியில் தெறிக்க விடுகிறார். அவ்வப்போது அஜித் பேசும் பஞ்ச் வசனங்கள் செம மாஸ் ஆக உள்ளன. உதாரணமாக, காட் ப்ளஸ் யூ, கூட்டத்தை நான் சேர்க்கறது இல்லை, என்றும் என் வழி ஒரே வழி தான், பிரச்சனையைக் கன்டு ஓடக்கூடாது சந்திக்கணும், உயிரைக் கொடுப்பேன் என சொல்பவனை நம்பக்கூடாது என அவர் பேசும் வசனங்களால் அரங்கம் ரசிகர்கள் விசிலால் அதிர்கிறது.
மகனுக்காக ஏங்கும் உணர்வுபூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. அஜித் மனைவியாக வரும் திரிஷா நடிப்பு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. அவருடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறையில் இருக்கும் மகனை நினைத்து கதறும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். அஜித்துக்கு அடுத்தபடியாக வில்லன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் அர்ஜுன் தாஸ் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக காந்த குரலில் அவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.
ஒத்த ரூபாய் தாரேன் பாடலுக்கு அழகிகளுடன் ஆட்டம் போடும் போது அர்ஜுன் தாஸ் ரசிக்க வைத்துள்ளார். அதேபோல் அஜித்துக்கு மாமனாராக வரும் பிரபு, மைத்துனராக வரும் பிரசன்னா, நண்பராக வரும் சுனில் ஆகியோரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவை படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. சிம்ரன் மற்றும் யோகி பாபு கெஸ்ட் ரோலில் வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் வில்லத்தனத்தில் கலக்கியுள்ளார்.
ஜி.வி பிரகாஷின் பாடல்களுக்கு ஆட்டம் போட வைத்துள்ளார். பின்னணி இசையிலும் அசத்தி இருக்கிறார். இருப்பினும் சத்தத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் திரையில் அழகாக தெரிகின்றனர்.
அஜித் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தை பக்காவாக ஆதிக் கொடுத்துள்ளார். அஜித்தின் பல படங்களை இதில் கனெக்ட் செய்துள்ளது சிறப்பு. அதோடு த்ரிஷாவை மங்காத்தா படத்தின் மூலமும், பிரபுவை பில்லா படத்தின் மூலமும், சிம்ரனை வாலி படத்தின் மூலமும் அழகாக இணைக்கிறார். எல்சியு பாணியில் ஜிபியு-வை செய்துள்ளார் இயக்குனர்.
படம் முழுக்க அஜித்தை தவிர வேறு யாரும் மனதில் பதியவில்லை. அத்தனை நடிகர்கள் இருந்தாலும் அஜித்தை தவிர யாருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. இதில் கொஞ்சம் விதிவிலக்காக அர்ஜுன் தாஸ் தனியாக தெரிகிறார். ஆக்ஷன் அதிகமாக இருப்பதால் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் அதீத இரைச்சல் மற்றொரு பலவீனம்.