நானே பா.ம.க., தலைவர்: மகனது தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ்

10 சித்திரை 2025 வியாழன் 18:52 | பார்வைகள் : 945
பா.ம.க., தலைவர் பதவியையும் நானே எடுத்து கொள்கிறேன். பா.ம.க.,வின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் அன்புமணியை பா.ம.க.,வின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்'' என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
பா.ம.க., கட்சியின் தலைவராக அன்புமணி இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) மகனது தலைவர் பதவியை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பறித்து கொண்டார். இது குறித்து விழுப்புரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., தலைவர் பதவியையும் நானே எடுத்து கொள்கிறேன்.
தேர்தலின் வெற்றிக்காக, அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பா.ம.க.,வின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் அன்புமணியை பா.ம.க.,வின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். பா.ம.க.,கட்சியினர் ஒற்றுமை உணர்வுடன் தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும்.
நான் தலைவராக பொறுப்பேற்றதற்கு காரணங்கள் பல உண்டு. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது. பதவி பெறும் ஆசை எனக்கில்லை. தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
கடந்தாண்டு டிசம்பர் 28ல்!
மேடையிலேயே வார்த்தை போர்
கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, நேரடியாக மேடையிலேயே வார்த்தை போர் வெடித்தது. இது அரசியல் களத்தில் பேசும் பொருளானது.
மறுநாள், தைலாபுரம் தோட்டத்தில் தந்தையுடன் அன்புமணி சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினார். 'ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்' என தந்தையை சந்தித்த பின், நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு தவறு
இது குறித்து பா.ம.க., பொருளாளர் திலகபமா வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க.,வின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அவரின் அன்பினை ருசித்தவள் நான் . ஆனால் இந்த முடிவு தவறு. 'அன்புதானே எல்லாம்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.