புரட்சியில் தப்பிய ஒரு கோபுரம்
9 மார்கழி 2016 வெள்ளி 12:24 | பார்வைகள் : 19403
1797 ல் பிரெஞ்சுப் புரட்சி நடந்த நேரம்... புரட்சியாளர்கள் பரிஸ் நகரின் பல பகுதிகளை ஆக்கிரமித்து, பல முக்கிய இடங்களை அடித்து நொறுக்கினர். அதில் ஒன்று, பரிஸ் 4 இல் சத்தலே க்கு அருகில் இருந்த Saint-Jacques-de-la-Boucherie தேவாலயம்.
தேவாலயத்தை அடித்து நொறுக்கி, இருந்த இடம் தெரியாமல் ஆக்கிய புரட்சியாளர்கள், ஏனோ அருகில் இருந்த 52 மீட்டர் உயரமான கோபுரத்தை மட்டும் விட்டு வைத்தனர்.
1509 ம் ஆண்டு ஆரம்பித்து 1525 இல் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற இந்தக் கோபுரம் இப்போது பரிசின் இதயப்பகுதியிலே நிமிர்ந்து நிற்கிறது. Tour Saint-Jacques எனப்படும் இந்த கோபுரம் ‘பாரம்பரிய சொத்துக்களில்’ ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக்காலத்தில் பரிசில் மிகவும் புகழ்பெற்றிருந்த பொதுச் சந்தையில் விற்கப்படும் இறைச்சிகளின் மிருகங்களை இதில் சிலையாக வடித்து வைத்தனர் என்கிறார்கள்.
2008 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தக் கோபுரத்தை ஆய்வு செய்த நிபுணர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கோபுரத்தின் உச்சியிலே இருந்த 16 ம் நூற்றாண்டு கற்களும் சிலைகளும் காணாமல் போயிருந்தன. அவற்றுக்குப் பதிலாக அதே உருவம் கொண்ட வேறு கற்களே பொருத்தப்பட்டிருந்தன.
19 ம் நூற்றாண்டிலே திருத்த வேலைகள் செய்தவர்கள் இந்த மோசடி வேலைகளைச் செய்திருந்ததாக அதிகாரிகள் கண்டறிந்தார்கள். இருந்தபோதிலும் இந்தக் கோபுரத்தின் புகழ் இன்னமும் மங்காது நிமிர்ந்து நிற்கிறது.