மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்

11 சித்திரை 2025 வெள்ளி 14:03 | பார்வைகள் : 461
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 25,753 ஆசிரியர்களின் பணி நியமனத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் நியமிக்கப்பட்டதாக, உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், வேலையிழந்துள்ள ஆசிரியர்களில் ஒரு பிரிவினர், கோல்கட்டாவில் ஆச்சார்ய சதன் என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற, போலீசார் நேற்று நடத்திய தாக்குதலில், பலர் காயமடைந்தனர்.
அவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பா.ஜ., - எம்.பி., அபிஜித் கங்கோபாத்யா மற்றும் ராஜ்யசபா முன்னாள் எம்.பி., ரூபா கங்குலி ஆகியோர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது பேசிய எம்.பி., அபிஜித் கங்கோபாத்யா போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்தார்.
மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்கள் வேலை இழக்கக் காரணமாக இருந்தது, அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாவின் உத்தரவுதான். அதன் அடிப்படையிலேயே மேல்முறையீடுகளின் போது, உச்ச நீதிமன்றம், ஆசிரியர்களின் வேலையை பறித்து உத்தரவு பிறப்பித்தது.
ேகால்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து, 2024ல், பா.ஜ.,வில் சேர்ந்து, டம்லுக் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற அபிஜித் கங்கோபாத்யா தான், இந்த விவகாரத்தின் காரணகர்த்தா. தற்போது அவரே, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆறுதல் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.