உக்ரைனிய 158 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

11 சித்திரை 2025 வெள்ளி 03:56 | பார்வைகள் : 753
உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை அதிகாலை, உக்ரைன் நடத்திய ஒரு பெரிய ஆளில்லா விமான தாக்குதல் (Drone Attack) தெற்கு ரஷ்யாவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராம் செயலி மூலம் வெளியிட்ட தகவலின்படி, இரவு நேரத்தில் மொத்தம் 158 உக்ரேனிய ஆளில்லா விமானங்களை ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன.
இதில், குறிப்பாக தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தில் மட்டும் 29 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி நிலவரப்படி, இந்த தாக்குதலில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள விரிவான தகவல்களின்படி, கிராஸ்னோடர் பிராந்தியத்தில் 69 ஆளில்லா விமானங்களும், ரஷ்யாவின் வடக்கு காக்கேசியன் பகுதியில் அமைந்துள்ள வடக்கு ஒசேஷியா-அலானியாவில் மேலும் 15 ஆளில்லா விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய அமைச்சகம் தாங்கள் இடைமறித்து அழித்த ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளது. உக்ரைனால் ஏவப்பட்ட மொத்த ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல்கள் குறித்து உக்ரைன் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்கவில்லை.