ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் பரிசிலே ஒரு சிவப்பு அரங்கு
2 மார்கழி 2016 வெள்ளி 09:29 | பார்வைகள் : 18915
பரிசில் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஆடல் பாடல்களுக்கும் எப்போதுமே குறைவில்லை. ஒவ்வொரு இரவிலும் எங்கோ ஒரு மூலையில் பெரிய பெரிய இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கும். பரிசில் வந்து நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்பது உலகக் கலைஞர்களின் அவா.
நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடந்த பெரிய பெரிய மண்டபங்கள் வேண்டும் அல்லவா? உலகப் புகழ்பெற்ற பல அரங்குகள் இங்கே உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் Le Zénith அரங்கு.
பரிசின் 19 வது வடாரத்திலே Porte de la Villette, Porte de Pantin, Pantin போன்ற தொடருந்து மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு அருகே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது, 6293 இருக்கைகள் கொண்ட இந்த மாபெரும் அரங்கு.
1983 இல், முன்பு இருந்த, Hippodrome de Pantin அரங்கைப் புதுப்பித்து உருவாக்கப்பட்டதுதான் இந்த Le Zénith அரங்கு. Philippe Chaix, Jean-Paul Morelஆகியோர் இதன் வடிவமைப்பாளர்கள். அப்போதைய கலாச்சார அமைச்சர் Jack Lang இன் திட்டமிடலில் உருவானது இந்த சிவப்பு அரங்கு.
Britney Spears, Rihanna, Lady Gaga, Nicki Minaj போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் இங்கு உவந்து நிகழ்ச்சிகள் நடத்திச் சென்றுள்ளார்கள். பிரபல பிரெஞ்சுப் பாடகர் M.POKORA வின் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்று வரும் 21.03.2017 இல் நடக்கவிருக்கிறது.
இந்த அரங்குக்கு பிரான்சின் பல மாவட்டங்களில் கிளைகள் உள்ளன. அருமையான இசை நிகழ்ச்சி ஒன்றை அனுபவிக்க விரும்பினால் ஒருமுறை நீங்கள் சென்று வரலாம்.