உளறிக்கொட்டும் அமைச்சர்கள்; உச்சகட்ட கோபத்தில் முதல்வர்!

11 சித்திரை 2025 வெள்ளி 15:04 | பார்வைகள் : 796
தமிழக அமைச்சர்கள் ஏதோ ஒன்றை உளறிக்கொட்டி அவ்வப்போது சர்ச்சைக்கு வழி ஏற்படுத்திக் கொண்டே இருப்பது, தமிழக முதல்வருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான துரைமுருகன், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூட்டத்தில் பேசினார்.
இதற்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியிலும், பொதுவான அனைவரது மத்தியிலும் கடும் கண்டனம் எழுந்தது. இது பற்றி முதல்வர் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன், வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, அமைச்சர் பொன்முடியும், உளறிக் கொட்டி சர்ச்சையை உற்பத்தி செய்யக்கூடியவராக இருக்கிறார். பெண்கள் பஸ்சில் ஓசியில் பயணிப்பதாக, கூறி கேலி செய்தவர் பொன்முடி. குறை சொல்ல வந்த பெண் ஒருவரை அவர் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சை ஏற்பட்டது.
பெண் ஒன்றிய சேர்மனிடம் ஒருவரிடம், 'நீங்கள் எஸ்.சி., தானே' என்று கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கினார். தண்ணீர் பிரச்னை பற்றி புகார் அளிக்க வந்த பெண்ணிடம், 'எனக்கா ஓட்டுப்போட்டு கிழித்தீர்கள்' என்று கேட்டார். கடைசியாக, அவர் பொதுக்கூட்டத்தில் பெண்கள் பற்றியும் சைவம், வைணவம் பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையத்திலும் பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி மூத்த அமைச்சர்களே அரசுக்கு தலைவலி உண்டாக்கும் வகையில் உளறிக் கொட்டுவது முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகவே பொன்முடியின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல்வர் கோபத்தின் எதிரொலியாகவே அமைச்சர் துரைமுருகனும் தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார் என்கின்றனர் கட்சியினர்.