மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

11 சித்திரை 2025 வெள்ளி 17:06 | பார்வைகள் : 823
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு, அமைச்சர் துரைமுருகன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்தார்.
அண்மையில், தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், ''தமிழகத்தில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள். மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒரே அணியில் சேரும். ...... போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என பேசியிருந்தார்.
இவ்வாறு பேசுகையில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். இதற்கு கடும் கண்டனம் வலுத்து வந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தன் பேச்சுக்கு அமைச்சர் துரை முருகன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்தார்.
இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கருணாநிதி கருணை உள்ளத்தோடு 'மாற்றுத் திறனாளிகள்' என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன். கட்சி தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இந்த தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும்.
மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எந்த அளவுக்கு வருந்தியிருப்பார் என்பது எனக்கு தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.
பெண்கள் குறித்து பொன்முடியின் அவதூறு பேச்சு காரணமாக, கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு இன்று துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.