அமித் ஷா -குருமூர்த்தி ஆலோசனையில் பேசியது !

11 சித்திரை 2025 வெள்ளி 19:10 | பார்வைகள் : 912
உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆடிட்டர் குருமூர்த்தி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக கட்சிகளை சேர்ப்பது, மாநில பா.ஜ.,வுக்கு தலைவர் நியமிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். இன்று காலை தமிழிசை வீட்டுக்கு சென்று அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார்.
இதில், அண்ணாமலை மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தி.மு.க., என்ன செய்ய வாய்ப்புள்ளது, அதை சமாளிப்பது எப்படி, கூட்டணியில் யார் யாரை சேர்க்கலாம், மாநில தலைவராக யார் இருந்தால் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான குருமூர்த்தியின் ஆலோசனைகளை அமித் ஷா கேட்டுக் கொண்டார். இருவரும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்களை, டில்லியில் இருக்கும் பிரதமர் மோடி, கட்சி தலைவர் நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் கலந்து பேசி, கூட்டணி தொடர்பான முடிவுகளை அமித் ஷா மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.