அடுத்த பட இயக்குனரை அறிவித்தாரா அஜித்?

11 சித்திரை 2025 வெள்ளி 14:02 | பார்வைகள் : 635
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் குவிந்தது என்பதை பார்த்தோம். மேலும் முதல் நாளிலேயே இந்த படம் 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று விடுமுறை நாட்கள் வருகின்றதால், இந்த படம் முதல் ஐந்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளதால், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார்கள்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்துக்கு தனுஷ் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், அவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், அஜித் ஒரு பிரம்மாண்டமான காரில் இறங்கும் காட்சி வருகிறது. அந்த கார் நம்பர் பிளேட்டில் “DIR AK 64 2026" என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம், அஜித் தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்துள்ளார் என்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, 'குட் பேட் அக்லி’ படத்தை பார்த்தவுடன், "இன்னொரு படத்தில் நாம் இணைந்து பணி செய்வோம்" என்று அஜித் ஆதித்துக்கு வாக்குறுதி அளித்ததாக தகவல் வந்திருந்தது.
அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் அவருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் தருவார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ’வீரம்’, ’வேதாளம்’, ’விவேகம்’ ஆகிய படங்களில் நடித்த அஜித், அதன் பிறகு எச் வினோத் இயக்கத்தில் ’நேர்கொண்ட பார்வை’, ’வலிமை’, ’துணிவு’ ஆகிய தொடர்ச்சியான மூன்று படங்களில் நடித்தார். அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்க வாய்ப்பு தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.