Paristamil Navigation Paristamil advert login

வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கைது செய்யக்கூடாதா?

வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கைது செய்யக்கூடாதா?

12 சித்திரை 2025 சனி 10:25 | பார்வைகள் : 331


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார இறுதி இலங்கை விஜயம் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததாக பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது  ஏப்ரில் 4 வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரில் 6 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அவரின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாக  இரு நாடுகளினதும் தேசிய பாதுகாப்புக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை அங்கீகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு  தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட  ' ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ' விருது ஆகியவை அமைந்தன.

இணக்கபூர்வமான ஒரு சூழ்நிலையில் முரண்பாட்டுக்குரியதாக அமைந்தது வடபகுதி கடற்பரப்பிற்குள் பெரும் எண்ணிக்கையில்  அத்துமீறிப் பிரவேசித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிப்பிடிப்பதுடனும் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது போன்ற கெடுதியான நடைமுறைகள் மூலமாக கடல்வாழ் உயிரினங்களை நிர்மூலம் செய்து வருவதுடனும் தொடர்புடைய பிரச்சினை மாத்திரமேயாகும்.

இரு தலைவர்களும் எந்தளவுக்கு இந்த பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்ந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால், அவர்களின் ஊடக அறிக்கைகள் இந்த பிரச்சினை தொடர்பில் வேறுபட்ட மனப்பான்மைகளைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டின.

இந்த பிரச்சினைக்கு " நிலைபேறான  தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை ஒன்று தேவை என்று திசாநாயக்க வலியுறுத்தினார். " இழுவைப்படகுகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாரதூரமான சேதத்தை தடுத்து  நிறுத்துவதற்கும் சட்டவிரோதமாக  மீன்பிடிப்பதை தடுப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று நாம் கோருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், மறுபுறத்தில் இந்திய பிரதமர் மோடி பெருமளவுக்கு நம்பிக்கையுடனான ஒரு அணுகுமுறையை கடைப்பிடித்தார். இந்த பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்று வர்ணித்த அவர் மனிதாபிமான அணுகுமுறை ஒன்று கடைப்பிடிக்ககப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியும் தானும் இணங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று  அவர் வலியுறுத்தினார்.

அதை தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி  நிறுவன ரீதியான கலந்தாலோசனைகளை தீவிரப்படுத்துவதற்கும் அண்மைய எதிர்காலத்தில் இரு நாடுகளினதும் மீனவர் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு வசதி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களுக்கு கூறினார்." இரு தரப்புகளுக்கும் இடையிலான உயர்மட்டங்கள் உட்பட சகல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியான ஒரு அம்சமாக இது இருந்து வருகிறது " என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் இரு தரப்புகளினாலும் கணிசமானளவு விரிவாக மீன்பிடிப் பிரச்சினை ஆராயப்பட்டது என்று கூறினார். " இறுதியாக பார்க்கும்போது  இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை  என்றும் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை  மீள்பரிசீலனை செய்யமுடியும்  என்றும்  பிரதமர் வலியுறுத்தினார்."

மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை பற்றி வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு இணங்க இந்தியாவினாலும் இலங்கையினாலும் அடையாளபூர்வமான  பரஸ்பர நல்லெண்ண  சமிக்ஞை ஒன்று காண்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபரினால் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தமிழ்நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த பதினொரு மீனவர்கள் இலங்கையினால் விடுதலை செய்யப்பட்டனர்.  வடபகுதி கடலில் அத்துமிறி மீன்பிடித்தமைக்காக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்திருந்தனர். அதேபோன்றே யாழ்ப்பாணத்தின் குருநகரைச் சேர்ந்த இரு மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர். சீரற்ற காலநிலை காரணமாக  படகுகள்  திசைமாறி இந்திய கடற்பரப்புக்குள்  சென்றபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி -- தமிழ்க் கட்சிகள் சந்திப்பு

இது இவ்வாறிருக்க, வட இலங்கையின் டற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினையை ஏப்ரில் 5 ஆம் திகதி இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒரு தூதுக்குழுவும் கிளப்பியது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்  (புளொட் ) தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் யாழ்ப்பாண மாவடட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமீழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எழுவர் அடங்கிய தூதுக்குழு மோடியைச் சந்தித்தது.

இவர்களது சந்திப்பு தொடர்பாக ' தி இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் அனுப்பிய செய்தி பின்வருமாறு ;

" வட இலங்கையினதும் தமழ்நாட்டினதும் மீனவர்களைப் பாதிக்கும் மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்யவேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைலர்கள் சனிக்கிழமை ( ஏப்ரில 5, 2025) வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
" பாக்குநீரிணையில் வளங்களுக்காக நீண்டகாலமாக நிலவிவரும் இந்த தகராறு குறத்து கவனத்துக்கு கொண்டுவந்த இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்புக்களையும் பாக்குநீரிணையில் கடல்சார் சூழல்தொகுதிக்கு ஏற்படுகின்ற அழிவுகளையும் விளக்கிக் கூறினர்.

" இந்த சந்திப்பின்போது தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் இழுவைப் படகுகளை பயன்படுத்தும் நடைமுறையை சாத்தியமானளவு விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கி மாற்று நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு 2016  ஆம் ஆண்டில் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை நினைவுபடுத்தினார். 2016 நவம்பரில் புதுடில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட  பேச்சுவார்த்தைகளில்  பங்கேற்ற இலங்கை தூதுக்குழுவின் ஒரு உறுப்பினரான சுமந்திரன் " ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாம் வரவேற்பதாக பிரதமர் மோடியிடம் கூறினோம். ஆனால் இழுவைப்படகுகளை பயன்படுத்தும் நடைமுறை இன்றுவரை தொடருவதை நாம் அவரிடம் சுட்டிக்காட்டினோம்" என்று கூறின்ர்.

" யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்டமூலம் ஒன்றையடுத்து 2017 ஆம் ஆண்டில் இலங்கை இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்தது. மீன் இனப்பெருக்கத்தை அனுமதிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் நடுப்பகுதிக்கும் ஜூன் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட  சுமார் இரு மாதங்களில் இந்தியா அதன் கிழக்கு கிரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு பருவகால தடைவிதிக்கும் நடைமுறையை தற்போது பின்பற்றுகிறது."

தமிழ்நாட்டு கரையோர மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்கள் சிலவற்றைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் வட இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது இலங்கை தமிழ் மீனவர்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இது ஒரு சில படகுகள் அவ்வப்போது வந்து எமது கடலில் மீன்பிடித்துவிட்டுச் செல்லும் ஒரு விவகாரம் அல்ல. இந்த பிரச்சினையின் அம்சங்கள் மிகவும் பாரதூரமானவை.
மீன்பிடி படகுகள் தொகுதி
பல வருடங்களாக தொடருவது இதுதான். பெருவாரியான மீன்பிடி படகுகளைக் கொண்ட தொகுதி ஒன்று (Flotilla of fishing boats) எமது கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. படகுகளின் எண்ணிக்கை 500 க்கும் அதிகமானதாகவும்  அவற்றில் பல படகுகள் வசதியான உபகரணங்களைக் கொண்ட இழுவைப் படகுகளாக இருக்கின்றன.

இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயற்பாடாகும். இந்த படகுத் தொகுதியின  நடவடிக்கைகள் மன்னார் குடாவிலும் வங்காள விரிகுடாவிலும் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கடற்படை வந்து மீன்பிடிப்பது போன்று இருக்கிறது. இந்திய மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கரையோரத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களில் மிகவும் நெருக்கமான பகுதிகளுக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன.
நெடுந்தீவு , கச்சதீவு போன்ற வடபகுதி தீவுகளுக்கு நெருக்கமாகவும் வந்து இந்திய மீனவர்கள் பெருமளவில் மீன்பிடிக்கிறார்கள். இந்திய படகுகள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக எமது கடறபரப்புக்குள் வந்து பொழுது புலர்வதற்கு முன்னதாக திரும்பிச் சென்றுவிடுகின்றன.

இந்த இந்திய படகுகள் தொகுதி  தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து செயற்படுகின்றன. இவற்றின் பெரும் எண்ணிக்கை காரணமாக  இலங்கை மீனவர்கள் அவற்றை எதிர்கொண்டு தடுக்க முடியாமல் இருக்கிறது. இந்த படகுகள் தொகுதியின் தோற்றமே இலங்கை மீனவர்களை அச்சுறுத்துகிறது. இந்திய மீனவர்களிடம் அகப்படுகின்ற சில இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களது படகுகுகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலர் மரணமடைந்த சம்பவங்களும் உண்டு.

இலங்கை கடற்படை
இலங்கை கடற்படை கூட இந்திய மீன்பிடி படகுகள் தொகுதிக்கு நடுவில் நகருவதில்லை.  அவ்வாறு இலங்கை கடற்படை கப்பல்கள் செய்தால்  இந்திய படகுகள் அவற்றை சுற்றிவளைத்து மோதுகின்றன. அத்தகைய அண்மைய சம்பவம் ஒன்றில் இலங்கை கடற்படை வீரர் ஒருவருக்கு காயமேற்பட்டு இறுதியில் அவர் மரணமடைந்தார். இது சமாதான காலம். இந்தியாவுடன் இலங்கை போரில் ஈடுபட்டிருக்கவில்லை.

அதனால், இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடிப் படகுகளில் இருக்கும் " சிவிலியன் ஆக்கிரமிப்பாளர்களை " நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யமுடியாது. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அச்சுறுத்தி அட்டகாசம் செய்கிறார்கள்.
ஆனால், இலங்கை கடற்படையினரும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சாத்தியமான வேளைகளிர் கடற்படை உஷாராகவே இருக்கிறது. அதனால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கரையோரத்துக்கு மிகவும் நெருக்கமாக வரமுடிவதில்லை. பெருவாரியான படகுகள் தொகுதியில் இருந்து விலகி தனியே வருகிற இந்திய படகை கடற்படை பாய்ந்து பிடித்து விடுகிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது தனியான படகுகளை கடற்படை சுற்றி வளைத்து பிடிக்கிறது. அந்நிய மீனவர்களின் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை 550 இந்திய மீனவர்களைை கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை படகுகளின் சொந்தக்காரர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் உட்பட சிலர் குற்றவாளிகளாகக் காணப்படுவதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த வருடம் இதுவரையில் நூறுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 94 பேர் இன்னமும் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல்

மீன்பிடிப் படகுகள் தொகுதியாக எமது கடற்பரப்புக்குள் ஊடுருவி எமது மீன்களையும் இறால்களையும் நண்டுகளையும் இந்திய மீனவர்கள் பிடிப்பது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு அம்சம் மாத்திரமே. அதை விடவும் படுமோசமான அம்சம் இயற்கைக்கு நிரந்தரமாக ஏற்படுத்தப்படுகின்ற அழிவாகும்.
இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய படகுகளில் அனேகமானவை இழுவைப் படகுகளாகும். அவை கடல் படுக்கை ஓரமாக பெரிய மீன்பிடி வலைகளை ஒன்றாக இழுத்துக்கொண்டு வருகின்ற படகுகளாகும். அவை மீன் முட்டைகள், சிறிய மீன்வகைகள், கூனிஇறால்கள் மற்றும் சகல மீன்வகைகளையும் கடல் தாவரங்களையும் ஒருசேர இழுத்துக் கொண்டு வருகின்றன.

பல தசாப்தங்களாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு  கரையோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதியை உயர்த்தி பெரும் இலாபத்தை கொடுக்கும் இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள். மீன்வகைகள் இல்லாமல் போவதும் கூனி இறால்கள் குறைவடைந்து போவதுமே இதன் எதிர்மறையான விளைவாக இருந்து வருகிறது. தமிழ்நாடு கரையோரமாக உள்ள கடலில் குறிப்பாக பாக்கு நீரிணையின் இந்திய பக்கத்தில் இதுவே நிலைமையாக இருக்கிறது.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி தமிழ்நாட்டு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதில் அதீத நாட்டம் காட்டுவதற்கு  இந்த நிலைவரமே ஒரு மேலதிக காரணமாக இருக்கிறது. பெரியளவிலான இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலம்க இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கடல்வாழ் உயிரினங்களை அழிக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் நிலைபேறாக மீன்பிடிப்பது என்பது சாத்தியமாகாமல் போகக்கூடிய அளவுக்கு இலங்கையின் கடல்வளங்கள் படுமோசமாக குறைவடைந்து போகக்கூடும். ஆனால், தங்களது சொந்த கடல் வளத்துக்கு மீட்டெடுக்க முடியாத கெடுதியை விழைவித்த சுயநலவாதிகளான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக்கும் அதே அழிவைச் செய்வதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.
பகைமையும் வெறுப்பும்
மேலும், தமிழ்நாடு மீனவர்கள் அவர்களது மொழியையே பேசுகின்ற இலங்கை மீனவர்கள் மீது நம்பமுடியாத அளவு பகைமையையும் வெறுப்பையும் வெளிக்காட்டுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிடம் அகப்படுகின்ற இலங்கை மீனவர்கள் படுமோசமாக தாக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன.
இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான  வலைகள் இந்திய மீனவர்களினால் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. அண்மையில் சில இந்தியப் படகுகள் மாதகல் -- சுழிபுரம் கரையோரத்துக்கு நெருக்கமாக வந்து மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியிருக்கின்றன. ஒரு அரிதான சம்பவமாக  இலங்கையில் உள்ள இந்திய தூதரகம்  அதற்காக இழப்பீட்டை வழங்கியிருக்கிறது.
இவ்வாறாக, தமிழ்நாட்டு மீனவர்கள் ஈவிரக்கமின்றியும் பேராசைத்தனமாகவும் வட இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டுவதுடன  மீட்சிபெறமுடியாத அளவுக்கு கெடுதியையும் விழைவித்துவிட்டுப் போவதை காணக்கூடியதாக இருக்கிறது. நீண்டகாலத்துக்கு நிலைபேறாக மீன்பிடிப்பதற்காக கடல் வளங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது.

தமிழ்நாட்டில்  கடற்தொழில் இனிமேலும் ஒரு பாரம்பரியமான தொழிலாக இல்லாமல் போயிருப்பது இதற்கு பிரதான காரணமாகும். பல தலைமுறைகளாக கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த சாதிகளில் பல கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு கல்வியின் மூலமாக வாழ்க்கையில் மேம்பட்டு விட்டன. கடற்தொழில் இன்னமும் கூட குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாகவோ அல்லது உள்ளூர் முதலாளியின் படகுகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு தொழிலாகவே இல்லை.

முலாளித்துவ தொழில் துறையாக  மாறிய மீன்பிடி

பதிலாக, கடற்தொழில் ஒரு முதலாளித்துவ தொழிற்துறையாக மாறிவிட்டது. மீன் வகைகளும் கூனி இறால்களும் நண்டுகளும் " பண்டங்களாக்கப்பட்டு விட்டன."  அவை வாழ்வாதார நீட்சிக்கான எந்த அக்கறையும் இன்றி சாத்தியமானளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்ற பண்டங்களாகி விட்டன.
பெரிய மீன்பிடி படகுகளும் இழுவைப் படகுகளும் பணக்கார முதலாளித்துவ வாதிகளுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவர்களில் பலர்  அரசியல்வாதிகளாக அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருக்கிற்ர்கள். பல படகுகள் மற்றவர்களுக்கு " பினாமிகளாக " இருக்கின்ற மீனவர்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. பினாமி என்பதுை உண்மையில் இன்னொருவருக்கு சொந்தமாக இருக்கும் ஒரு சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளரைக் குறிப்பதாகும்.

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நல உச்சவரம்பு  ஒன்று இருப்பதனால், பல நில உடைமையாளர்கள் தங்களது மேலதிகமான நிலங்களை படிப்பறிவில்லாத ஊழியர்களையும்  வேலைக்காரர்களையும் பினாமிகளாக வைத்து அவர்களின் பெயர்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்றே பல மீன்பிடி படகுகளும்  உண்மையில் பினாமிகளாக இருக்கின்ற மீனவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கை -- இந்திய மீன்பிடித் தகராறுகளைப் பற்றி ஆய்வுசெய்த டச்சு ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் மீன்பிடிப் படகுகளில் பணியாற்றுபவர்களில்  பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடாத சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் தினச்சம்பள அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களின் முதலாளிகளினால் இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இந்திய அதிகாரிகள்
இவ்வளவு பெருந்தொகையான மீன்பிடிப்படகுகள் இந்திய அதிகாரிகளினால் கட்டுப்படுத்தப்படாமல் அல்லது பிடிக்கப்படாமல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் எவ்வாறு ஊடுருவக்கூடியதாக இருக்கிறது என்பது இந்த பிரச்சினையில் இன்னொரு முக்கியமான விடயம். நடப்பவை குறித்து இந்திய அதிகாரிகள் வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு கண்டும் காணாமல் இருக்குமாறு தங்களது அரசியல் எசமானர்களினால் அறிவுறுத்தப்படுகிற்ர்கள் .
அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்ற சாத்தியத்தையும் நிர்கரிக்க முடியாது. காரணம் என்னவாக இருந்தாலும் பிரச்சினை கூர்மையடைந்துவிட்டது. முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவின. இப்போது அவை பெரும்பாலும் தினமும் வருகின்ற என்று தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் நெடுந்தீவில் ஒரு கூட்டத்தில் கூறினார்.

கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர்

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கடற்தொழில், நீரியல்வள, சமுத்திரவியல் வள அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் இருக்கிறார். ஊவா மாகாணத்தின் பண்டாரவளையைச் சேர்ந்தவரான அவர் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகவும் இருக்கிறார்.
தமிழ்நாடடில் உள்ள தமிழ்பேசும் சகோதரர்களின் நடவடிக்கைகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுடன் நன்கு பரிச்சயமானவராக சந்திரசேகர் விளங்குகிறார். 2024 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதாகளைச் சேர்ந்த பெருமளவு மக்கள் தேசிய மக்கள் திசைகாட்டிச் சின்னத்துக்கே வாக்களித்தார்கள்.  வடகடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தவதாக தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதியே அதற்கு காரணமாகும்.

வடபகுதி மீனவர்களின் இந்த பிரச்சினை தொடர்பில் சந்திரசேகர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னதாக சந்திரசேகர் கொழும்பில் " தி இந்து " வுக்கு ஒரு நேர்காணலை வழக்கியிருந்தார். மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய அந்த நேர்காணல் அவர் நாசகாரத்தனமான இழுவைப்படகு முறையை இந்தியத்தரப்பு நிறுத்தினால் மாத்திரமே மீனவர்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வைக்காண முடியும் என்று குறிப்பிட்டார்.

" வடக்கு,  கிழக்கு மற்றும் மலையகம் உட்பட சகல இனக்குழுமங்களையும் சகல புவியியல் பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள்  அண்மைய தேர்தல்களில் எமக்கு ( தேசிய மக்கள் சக்திக்கு ) வாக்களித்து பெரிய ஒரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அவர்களது அக்கறைகளை கவனிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் விளைவான இந்த நீண்டகாலப் பிரச்சினையே எமது வடபகுதி மீனவர்களின் முக்கியமான கவலையாக இருக்கிறது" என்று அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.

" நவீன தொழில்நுட்பத்தையும் நிலைபேறான வழிமுறைகளையும் பயன்படுத்தி மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரிவான திட்டங்களில் இலங்கை -- இந்திய மீனவர் தகராறுக்கு தீர்வைக் காண்பதும் ஒரு அங்கமாகும். 2017 ஆம் ஆண்டால் 17.2 கிலோ கிராமாக இருந்த நாட்டின் ஆள்வீத மீன் பாவனை இப்போது 11. 07 கிலோ கிராமாக குறைந்து விட்டது.இது மக்கள் புரதத்தை உள்கொள்ளும் அளவின் ஒரு வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது.
" 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேதனைமிகு பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு மந்தபோசாக்கு மிகுந்த கவனத்துக்குரிய பிரச்சினையாக இருக்கிறது. மக்கள் ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு கடலுணவு உற்பத்தியை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அவற்றை எல்லாம் செய்வதற்கு எமது கடல் மற்றும் கடல்சார் பல்வகைமையைப் பாதுகாகக்க வேண்டியது அவசியமாகும் " என்றும் அமைச்சர் சந்திரசேகர் அந்த நேர்காணலில் மேலும் கூறினார்.

இலங்கையின் நிலைப்பாடு

மீன்பிடி நெருக்கடியில் இலங்கையின் நிலைப்பாடு மிகவும் தௌாவானது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.  வெறுக்கத்தக்க அந்த இழுவைப்படகு நடைமுறையை அவர்கள் நிறுத்த வேண்டும்.  நீணடகாலப் போரினால் பெரும் அவலங்களுக்கு உள்ளாகிய இலங்கை தமிழ் மீனவர்கள்  தங்களது வாழ்வைக் கட்டியெழுப்பவும் தங்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவின் " மனிதாபிமான " அணுகுமுறை

ஆனால், இந்தியாவின் ஆதிக்க மனோபாவமும்  அணுகுமுறையும்  வேறுட்டதாக இருப்பது கவலைக்குரியது.  இந்த பிரச்சினை மனிதாபிமான முறையில் அணுகப்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடி தொடக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் வரையானவர்களின் பதிலாக இருக்கிறது.
இந்த மனிதாபிமான அணுகுமுறை என்பது பாதிக்கப்படும் இலங்கை தமிழ் மீனவர்கள் மீதான அக்கறையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது இலங்கை கடற்பரப்பில் அதுதுமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான அக்கறையின் விளைவானது.

தமிழ்நாட்டு மீனவர்களை பாதிக்கப்படும் ஒரு தரப்பாக தவறான முறையால் காண்பிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையையும் ஆக்கிரமிப்பாளர்களாக தவறான முறையில் கூறப்படுகிறது. இலங்கை கடற்படை அப்பாவி தமிழ்நாட்டு  கொடூரமான முறையில் கைதுசெய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறது என்பதே இந்தியா கூறும் கதை.
இந்திய மீனவர்களை கைது செய்யப்படக்கூடாது எனபதும் அவர்களது படகுகள் கைப்பற்றப்படக்கூடாது என்பதுமே இந்தியா விரும்புகின்ற இரக்கமானதும் கண்ணியமாதுமான மனிதாபிமான அணுகுமுறை. சுருக்கமாகச் சொல்வதானால்,  மனிதாபிமான அணுகுமுறை என்ற பெயரில் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை தொடர்ந்து சுரண்டுவதை அனுமதிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்  அனுதாபம் கொன்று தின்னும் விலங்கு மீதானதாக இருக்கிறதே தவிர அதன் இரை மீதானதாக இல்லை.

பேச்சுவார்த்தைகள் கொடுமையான பகிடி

பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது கொடுமையான ஒரு பகிடியாகும். இது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக வீட்டுக்காரருக்கு கூறுவதை ஒத்ததாகும்.

இந்திய -- இலங்கை மீன்பிடி தகராறைப் பொறுத்தவரை,  வெவ்வேறு நேரங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன. உருப்படியாக எந்த பயனும் ஏற்படவில்லை. அதற்கு காரணம்  அந்த பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் நோக்குடனான செயற்பாடுகளாக இருந்தமையேயாகும். அத்துமீறலும் இழுவைப்படகு பயன்படுத்தலும் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இன்றி தொடருவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

கச்சதீவு

மேலும், இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் புதியதொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கச்சதீவை இந்தியா இலங்கைக்கு 1974  ஆம் ஆண்டில் விட்டுக் கொடுத்ததன் விளவாகவே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

கச்சதீவுக்கு அண்மையான கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் அவ்வப்போது  பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் பிரசாரப் படுத்தப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக்கொண்டால்  தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தவறாகக் கூறப்படுகிறது.

தமிழர்களின் இடர்பாடு இருட்டடிப்பு

இந்திய  -- இலங்கை மீன்பிடித் தகராறு தொடர்பில் இந்தியாவில் இடம்பெறுகின்ற கதையாடல்களில் இலங்கையின் வடபகுதி தமிழ் மீனவர்களின் அவலங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். பிரச்சினை விரோத உணர்வைக் கொண்ட இலங்கை கடறனபடைக்கும் அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான மோதலாகவே காண்பிக்கப்படுகிறது. இலங்கை தமிழ் மீனவர்களின் இடர்பாடுகள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கச்சதீவை மீளப்பெறுவதே  பிரச்சினைத் தீர்வுக்கு முக்கியமானதாக பேசப்டுகிறது.

எனவே இந்த பிரச்சினையின் தோற்றுவாய் என்ன ? ஏன்? எவ்வாறு இந்தப் பிரச்சினைக்குள் கச்சதீவு கொண்டுவரப்படுகிறது? இந்தியா கூறுவது போன்று இலங்கை "மனிதாபிமான " அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடித்து வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை கைதுசெய்யக்கூடாதா?   இந்த கேள்விகளை  இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.

நன்றி virakesari

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்