2026ல் தி.மு.க.,- த.வெ.க., இடையே தான் போட்டி: விஜய் உறுதி

12 சித்திரை 2025 சனி 18:35 | பார்வைகள் : 371
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பா.ஜ., வும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழகத்தில் நடப்பது என்ன?
பல செயல்பாடுகள், பா.ஜ., தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன. தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.தி.மு.க.,வை பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ., மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை. மூன்று முறை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில், 'நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.,வும். 'தாங்கள்தான் பா.ஜ.,விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழக மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி. தி.மு.க.வும் பா.ஜ.,வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது. தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்?
ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026ம் ஆண்டு தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான்.
பா.ஜ., மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி. மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். வாகை சூடுவோம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.