கொழும்பில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட இரு பெண்களுடன் காரை கடத்தி சென்ற நபர் மீது துப்பாக்கி சூடு
13 சித்திரை 2025 ஞாயிறு 12:31 | பார்வைகள் : 2869
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட இரு பெண்களுடன் காரினை திருடி சென்றவரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொலிஸார் காரை மீட்டுள்ளனர்.
காரினை திருடி சென்றவர் காரில் இருந்து தப்பி சென்றுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் வாசல வீதியில், நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தனது கர்ப்பிணி மனைவி மற்றும் தாயாருடன் காரில் வந்த ஒருவர், காரை இயங்கு நிலையில் நிறுத்தி விட்டு, உணவு வாங்குவதற்காக கொட்டாஞ்சேனை வீதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில்,கார் உரிமையாளரின் மனைவி மற்றும் தாயார் உள்ளே இருந்த போதே சந்தேக நபர் திடீரென குறித்த காரைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்காக கெப் வாகனத்தில் வந்த மட்டக்குளிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, இந்த கார் திருடப்பட்டமை தொடர்பான தகவல் கிடைத்தவுடனேயே விரைந்து செயற்பட்டு, தப்பிச் சென்ற காரை துரத்திச் சென்று நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனர்.
இருப்பினும், பொலிஸாரின் உத்தரவை மீறி சந்தேக நபர் காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றதால், பொலிஸ் அதிகாரிகள் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து காரை நிறுத்திய சந்தேகநபர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற நிலையில் , காரை பொலிஸார் மீட்டனர்.
இந்நிலையில், காரில் இருந்த கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவருக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan