Paristamil Navigation Paristamil advert login

அரசியல் களம்...சூடுபிடித்தது!: வசைபாடலுடன் ஆட்டம் துவங்கியது

அரசியல் களம்...சூடுபிடித்தது!: வசைபாடலுடன் ஆட்டம் துவங்கியது

13 சித்திரை 2025 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 431


பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி உறுதியானதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த கூட்டணி உருவானால், தங்கள் ஓட்டு சதவீதம் பாதிக்கப்படும் என்ற பீதியில் முதல்வர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்டோர், கூட்டணியை விமர்சிக்கும் ஆட்டத்தை துவங்கி உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், சென்னையில் நேற்று முன்தினம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்தார். இது, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விரும்பவில்லை

பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி ஏற்படக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தபோதே, அது சட்டசபையில் எதிரொலித்தது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை பார்த்து, 'உங்கள் கூட்டணி கணக்குகளை, வேறு யாரோ போட்டுக் கொண்டிருக்கின்றனர்' என்று கிண்டல்அடித்தார்.அதற்கு பதிலளித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி, 'எந்த கூட்டணி கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம்' என்றார். உடனே முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, 'நீங்கள் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்றார்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிகளாக விளங்கும் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கைகோர்ப்பதை, ஆளும் தி.மு.க., விரும்பவில்லை என்பதே இதன் வெளிப்பாடு என, தமிழக பா.ஜ.,வினர் விமர்சித்தனர்.

இந்நிலையில், கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானதும், அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அவசர பேட்டியில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, 'இனி ஒருபோதும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பழனிசாமி, இப்போது கூட்டணி வைத்து விட்டார். தமிழக மக்களுக்கு அவர் துரோகம் செய்து விட்டார்' என்றார்.

அதைத் தொடர்ந்து நேற்று முதல்வர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர், பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணியை வசைபாடி வரிசையாக கருத்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி என்பது தோல்வி கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்கு கொடுத்தவர்கள் தமிழக மக்கள். இதே தோல்வி கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மறக்கவில்லை

கூட்டணி என்பது அவர்களது விருப்பம் சார்ந்தது. ஆனால், எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினர்; எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்று சொல்லவில்லை. அ.தி.மு.க., தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை.

பதவி மோகத்தில், தமிழகத்தின் சுயமரியாதையை, தமிழகத்தின் உரிமைகளை, டில்லியிடம் அடமானம் வைத்து, தமிழகத்தை பாழாக்கியவர் தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.

அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை உறுதி செய்ததே ஊழல் தான் என்பதை தமிழக மக்கள் அறிவர். இரண்டு, 'ரெய்டு'கள் நடந்தவுடன், அ.தி.மு.க.,வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழகத்தை அடமானம் வைக்கத் துடிக்கின்றனர்.

பா.ஜ., தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும், தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர். சுயமரியாதையின்றி டில்லிக்கு மண்டியிட்டு, தமிழகத்தை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு, தமிழக மக்கள் தக்க விடையளிப்பர்.

த.வெ.க., தலைவர் விஜய்: தி.மு.க.,வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கனவே தயார் செய்துவிட்ட பா.ஜ., இப்போது பழைய பங்காளியான அ.தி.மு.க.,வை பகிரங்க கூட்டாளியாக கைப்பிடித்துள்ளது. ஏற்கனவே மூன்று முறை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட, ஒரு நிர்ப்பந்த கூட்டணி மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து துாக்கி எறியப் போவது உறுதி. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: கூட்டணியை அமித் ஷா அறிவித்தபோது, உடனிருந்த பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனசாமியாக இருந்தார். இந்த கூட்டணி, நான்கு மாதங்கள் நிலைக்குமா என்பது தெரியாது.

வி.சி., தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் தனித்து போட்டியிடும் சக்தி இல்லாத பா.ஜ., தலைமை, அ.தி.மு.க., மீது சவாரி செய்கிறது. இரண்டு திராவிட கட்சிகளில், ஒரு கட்சியை தோழமை கட்சி என்ற பெயரில் அரவணைத்து கொண்டே, அவர்களை வீழ்த்த வேண்டும் என்பது தான், பா.ஜ.,வின் உண்மையான செயல் திட்டம்.

இவ்வாறு அவர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்