நல்லதே நடக்கும்! கட்சி சகாக்களுடன் பேசிய பின் பா.ம.க., ராமதாஸ் அறிவிப்பு

14 சித்திரை 2025 திங்கள் 08:04 | பார்வைகள் : 566
பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது, அக்கட்சியில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ராமதாஸ், 'நல்லதே நடக்கும்' என்று கூறியது, அவர்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது. ஆனாலும், அவரின் மகன் முரண்டு பிடிப்பதால், கட்சி நிர்வாகிகள் மீண்டும் சமரச முயற்சியை தொடர்ந்துள்ளனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே, கடந்த லோக்சபா தேர்தலின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தன் மகள் வழி பேரன் முகுந்தனை, பா.ம.க.,வின் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார். அதை, பொதுமேடையிலேயே அன்புமணி எதிர்த்தார். இதனால், இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது.
இந்நிலையில், பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக, கடந்த 10ம் தேதி ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் 'இனி நானே தலைவராக செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார்' என்றார். இது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வழி நடத்துவேன்
இரு தினங்கள் அமைதியாக இருந்த அன்புமணி, நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'பா.ம.க.,வை தொடர்ந்து வழி நடத்தி செல்வேன். 2022 மே 28ம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தேர்தல் கமிஷனும் அங்கீகரித்துள்ளது. 'எனவே, தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். மே 11ல் மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரின் அறிவிப்பை, கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அதேநேரம், அன்புமணியின் அறிவிப்பு, ராமதாசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்டமாக பொதுக்குழுவை கூட்டி, தனக்குள்ள ஆதரவை நிரூபிக்கும் முடிவிற்கு வந்தார். உடன், தைலாபுரம் தோட்டத்திலிருந்த கட்சியின் தலைமை நிலைய செயலர் அன்பழகன் வழியே, மாவட்ட செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆலோசனை
விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, மயிலாடுதுறை என, பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார், விழுப்புரம் மாவட்ட செயலர் ஜெயராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயலர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தைலாபுரம் தோட்டத்திற்கு ஒருவர் பின் ஒருவராக, நேற்று காலையிலிருந்து வரத்துவங்கினர். பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், அன்புமணியின் அறிவிப்பு குறித்தும், பொதுக்குழுவை கூட்டும் தேதி குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், 'எல்லாம் சரியாகி விடும்' என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார், மாவட்ட செயலர் ஜெயராஜ் ஆகியோர், 'மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநில மாநாடு குறித்தும், மாநாட்டில் அதிக அளவில் கட்சியினர் பங்கேற்பது குறித்தும், ராமதாஸ் தலைமையில் ஆலோசனை நடந்தது' என்று தெரிவித்தனர். தைலாபுரம் தோட்டத்திற்கு, நேற்று பகல், 1:30 மணிக்கு வந்த, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ''விரைவில் நல்ல செய்தி வரும். ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து பேசி நல்ல முடிவை எடுப்பர்,'' என்றார்.
இந்தச் சூழலில், நேற்று மாலை அன்புமணி, மாமல்லபுரம் சென்றார். அங்கு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,''இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவரது கொள்கையை நிலைநாட்ட, பா.ம.க.,வை, ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், எல்லோரும் சேர்ந்து உழைப்போம்,'' என்றார்.
அன்புமணி இனி, கட்சியின் செயல் தலைவராக செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்த நிலையில், 'நான் கட்சி தலைவராக செயல்படுவேன்' என, அன்புமணி அறிவித்துள்ளது, கட்சியினரிடம் குழப்பத்தை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தந்தை மற்றும் மகனை சமாதானப்படுத்தும் முயற்சியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அன்புமணியுடன் முகுந்தன் சமரசம்
ராமதாஸ் தன் பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க., இளைஞர் அணி தலைவராக நியமித்ததே, அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், முகுந்தன் நேற்று மதியம் சென்னை பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். அதன்பின், மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார் அன்புமணி.
மாமல்லபுரத்தில் மாநாடு ஏன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்து, வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களுக்கும், மக்கள் தொகை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வட மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இம்மாவட்டங்கள் கல்வி, பொருளாதாரம், தனிநபர் வருமானம், மனித வளர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளன. இங்கு அதிகமாக வாழும் பட்டியலின மற்றும் வன்னியர் போன்ற பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாமல்லபுரத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.- அன்புமணி, பா.ம.க., தலைவர்