தோனியிடம் மந்திர கோல் இல்லை! CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து

14 சித்திரை 2025 திங்கள் 05:02 | பார்வைகள் : 412
நடப்பு ஐபிஎல் தொடரின் பரபரப்பான 30 வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெற உள்ளது.
இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில்,, தோனி கேப்டனாக இருப்பது அணிக்கு நிச்சயம் சாதகமான விஷயம் தான்.
ஆனால் அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என்று யாரும் நினைக்க வேண்டாம். அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார். நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அணியின் செயல்பாட்டை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த போட்டியில் எங்களது செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. எதிரணிக்கு எந்தவித சவாலும் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து, எப்படி முன்னேறுவது என்பது குறித்து தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாம் அனைவரும் சிக்ஸர்களைப் பற்றியே பேசுகிறோம். ஆனால் அது மட்டுமே கிரிக்கெட் இல்லை.
சிக்ஸர் அடிப்பதற்கும், பெரிய ஷாட் ஆடி ஓட்டங்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். சில அணிகள் இதை சிறப்பாக செய்கின்றன.
நாம் பேஸ்பால் போட்டியில் இல்லை. பந்திற்கும், பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல சமநிலை இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகு என்று ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.