என்னைப்பற்றி வதந்தி பரப்பும் திருமாவளவன்: ஜெயக்குமார் ஆவேசம்

14 சித்திரை 2025 திங்கள் 18:54 | பார்வைகள் : 569
பதவி என்பது தோளில் போட்ட துண்டு என்றார் அண்ணா. ஆனால், என்னை பொறுத்தவரையில் ஒரு கர்ச்சீப் தான்' என்று அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில், அந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும், அதன்மூலம் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, கருணாநிதி ஆட்சியின் போது தமிழ் புத்தாண்டு தினத்தை தை மாதத்தில் கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மரபையும், பண்பாட்டையும் தி.மு.க., காற்றில் பறக்கவிட்ட நிலையில், அது கூடாது என்பதற்காகவே, சித்திரையிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாட ஜெயலலிதா அரசாணை பிறப்பித்தார்.
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்தால் நான் கட்சியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் கூறினார். அது வதந்தி. நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்த செய்தியை பரப்பி வருகின்றனர். இந்த செய்திகளினால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் கிடைத்ததில் மகிழ்ச்சி. எங்களின் குடும்பம் 75 ஆண்டு காலம் திராவிட பாரம்பரியம் கொண்டது. தன்மானத்துடன் வளர்ந்த குடும்பம். பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்றதில்லை.
எங்களின் குடும்பத்தை அ.தி.மு.க., அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. என்னை அடையாளம் காட்டியது, அ.தி.மு.க.,வும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் தான்.
பதவிக்காக ஜெயக்குமார் யார் வீட்டு வாசலிலும் நின்றதில்லை. பதவி என்பது தோளில் போட்ட துண்டு என்றார் அண்ணா. ஆனால், என்னை பொறுத்தவரையில் ஒரு கர்ச்சீப் தான். அ.தி.மு.க., தான் என்னுடைய உயிர்மூச்சு.இவ்வாறு அவர் கூறினார்.