மதராஸி ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

14 சித்திரை 2025 திங்கள் 15:47 | பார்வைகள் : 390
விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில், விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்து, "இனிமேல் நீங்கள் தான்," என்று கூறுவார். இதனால், விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்ல உள்ளதால், தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு தருகிறார் என்ற அர்த்தத்தில், அவர் மறைமுகமாக கூறுகிறார் என, அந்த படம் ரிலீஸ் ஆன போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயன் நடித்த ' மதராஸி ' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்புபடுத்தி, நெட்டிசன்கள் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதாவது விஜய்யின் 'கோட்’ படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. அதே தேதியில், இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ’மதராஸி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இது ஒரு அபூர்வமான ஒற்றுமை எனக் கூறப்படும் நிலையில் "விஜய் துப்பாக்கி கொடுத்த ராசி தான்!" என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
உண்மையாகவே, விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப் போகிறார் என்பதற்கான மறைமுகமான செய்தியாகவும் ரசிகர்கள் இதை பார்ப்பதாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விஜய் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கிய பின்னர், சினிமாவில் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.