அ.தி.மு.க., கூட்டணிக்கு அமித்ஷா வேகம் காட்டியது ஏன்?

15 சித்திரை 2025 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 311
கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் செய்த தவறு, 2026 சட்டசபை தேர்தலிலும் நடந்து விடக்கூடாது என்பதால், ஓராண்டு முன்கூட்டியே அ.தி.மு.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வர, உள்துறை அமைச்சர் அமித் ஷா வேகம் காட்டினார் என தெரிய வந்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த கூட்டணி என்பதால், இரட்டை இலக்க வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த பா.ஜ., மேலிடத்துக்கு, இது ஏமாற்றம் அளித்தது.
கிடைக்கவில்லை
அடுத்து வந்த லோக்சபா தேர்தலில், பா.ம.க., - த.மா.கா., போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., போட்டியிட்ட போது, பிரதமர் மோடி தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்தார். அதன் விளைவாக குறைந்தது 10 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று அவரிடமும், அமித் ஷாவிடமும் தமிழக பா.ஜ., தெரிவித்தது. ஆனால், ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
அடுத்தடுத்த இரண்டு தேர்தல்களில், மோடியின் தீவிர பிரசாரத்தையும் மீறி, இவ்வளவு மோசமாக தோற்க என்ன காரணம் என்று அமித் ஷா ஆழமாக ஆய்வு செய்தார். கடைசி நேரத்தில் அவசரமாக வேட்பாளர்களை தேர்வு செய்தது, தோல்விக்கு முக்கியமான காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.
பொதுமக்களிடம் நல்ல பெயர் உள்ளவரா, கட்சியில் கடுமையாக உழைத்தாரா என்பதை பார்க்காமல், மேலிட தலைவர்களுக்கு வேண்டியவர் அல்லது அறிமுகமானவர் என்பதை மட்டுமே தகுதியாக கருதி, 'சீட்' வழங்கியதை அமித் ஷா அறிந்து கொண்டார்.
எட்டாக்கனி
அண்ணாமலையின் ஒப்புதலோடு இது நடந்ததா அல்லது அவருடைய ஆட்சேபத்தை மீறி நடந்ததா என்பது தெரியவில்லை.
ஆனால், அண்ணாமலை சொல்லி வந்தது போல, தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் உதவி இல்லாமல் பா.ஜ., தனித்து நின்றால், வெற்றி என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதை புரிந்து கொண்டார். அத்துடன், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பலமான கூட்டணி உருவாக்க எடுத்து வந்த முயற்சிகள் குறித்தும், அமித் ஷாவுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. (பார்க்க: டீ கடை பெஞ்ச்).
எனவே, அடுத்த ஆண்டு வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.,வின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் விரும்புகிறார்.
குறைந்தபட்சம் பா.ஜ.,வுக்கு, 10 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள், அதாவது 23 பேர் கிடைக்க வேண்டும் என அமித் ஷா விரும்புகிறார். தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சியை அங்குள்ள நிர்வாகிகளின் வாய்மொழியாக அல்லாமல், கள எதார்த்தமாக தெரிந்து கொள்ள விரும்புவதாக, சீனியர் நிர்வாகிகளிடம் அவர் தெளிவுபடுத்தினார்.
எனவே, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை காட்டிலும், எத்தனை தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்பதை கண்டறிந்து அறிக்கை தருமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு அவர் வேலை கொடுத்திருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அதிகமான தொகுதிகளை அ.தி.மு.க.,விடம் கேட்டு வாங்குவதை விட, ஜெயிக்கும் வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டும் கேட்டுப் பெற ஆர்வமாக இருக்கிறார்.
இந்த அணுகுமுறை பழனிசாமிக்கு திருப்தி அளித்துள்ளது. அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளை, பா.ஜ.,வுக்கு விட்டுக் கொடுத்ததால் இழந்தோம் என்பதை அவர் ஏற்கனவே புள்ளிவிவரங்களுடன் அமித் ஷாவுக்கு விளக்கியுள்ளார். வேட்பாளர் தேர்விலும், இதே போன்ற எதார்த்த அணுகுமுறையை பின்பற்றலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
எனினும், தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்பால், அமித் ஷா இந்த யோசனைகளை ஏற்க மாட்டார் என்ற எண்ணத்தில், 'பிளான் பி' என்ற மாற்று திட்டத்தையும் பழனிசாமி தயார் செய்தார். இந்த விவரங்கள் உளவு துறை வாயிலாக அமித் ஷாவுக்கு தெரிய வந்ததால், இனியும் காலம் தாழ்த்தினால் வேலைக்கு ஆகாது என்ற தீர்மானத்துக்கு வந்து, அ.தி.மு.க., கூட்டணிக்கு உடனடியாக ஒப்பந்தம் போட உத்தரவிட்டார்.
அதற்கு ஏற்ப, பா.ஜ., போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கு, தலா ஐந்து பேர் வீதம் தேர்வு செய்து, அதில் யாருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்ற தகவலை உளவுத்துறை வாயிலாக பெற்று, முன்கூட்டியே வேட்பாளர்களை, கட்சியினருக்கு அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளார் என்று அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
பலவீனமான தி.மு.க., கூட்டணி
'கூட்டணி கட்சிகள் பலவீனம் அடைந்திருப்பதால், வரும், 2026ல், தி.மு.க.,வை தோற்கடிப்பது கடினம் அல்ல' என்று, அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்களுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கையூட்டி இருக்கிறார்.
கடந்த, 10ம் தேதி சென்னை வந்த அமித் ஷா, தமிழக பா.ஜ., தலைவர்களுடன், நடப்பு அரசியல் சூழல் குறித்து பேசினார். அப்போது, 'தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட, 10க்கும் அதிகமான கட்சிகள் இருப்பதால், வலிமையான கூட்டணி போல தோன்றுகிறது. அதை எளிதில் வீழ்த்த முடியாது என்று நினைக்கிறீர்கள். அந்த எண்ணத்தை முதலில் மனதில் இருந்து அகற்றுங்கள்' என, அமித் ஷா அறிவுரை கூறியுள்ளார்.
'தி.மு.க., அணியில் காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு சதவீதம் கூட ஓட்டு வங்கி இல்லை. கடைசியாக, 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், 4.3 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. இப்போது, அது இன்னும் குறைந்திருக்கும். கம்யூனிஸ்ட், வி.சி., - ம.தி.மு.க., கட்சிகளுக்கு, தலா ஒரு சதவீதம் கூட ஓட்டு இருக்காது. எனவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 2021ல் செய்த தவறுகளை இப்போது செய்யாமல் இருந்தால், 2026ல் தி.மு.க., கூட்டணியை வீழ்த்துவது கடினமாக இருக்காது' என அவர் கூறியுள்ளார்.