அதிகார மமதையால் தி.மு.க., அமைச்சர்கள் அருவருப்பான பேச்சு: காங்., எம்.பி., கண்டனம்

15 சித்திரை 2025 செவ்வாய் 03:41 | பார்வைகள் : 412
அதிகார மமதையால் தி.மு.க., அமைச்சர்களின் குறிப்பிட்ட சில பேச்சுக்கள் அருவருக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது' என கூட்டணியில் உள்ள விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: ஜாதிய கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு, ஜாதி கணக்கெடுப்பு எடுத்த பின்பு 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஜாதிய கணக்கெடுக்கும் விவாதத்தை துவக்கி உள்ளது.
தமிழக அரசு அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் என்னவெல்லாம் பேசினார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
தி.மு.க., அமைச்சர்களின் சில பேச்சுக்கள் அருவருப்பானது; கண்டிக்கத்தக்கது. அதிகார மமதையால் அப்படி பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வக்ப் வாரிய சட்ட மசோதாவை காங்., முழுமையாக எதிர்க்கிறது. திருப்பரங்குன்றம் கல்லுாரி நிகழ்ச்சியில் கவர்னர் ஜெய் ஸ்ரீராம் என கூறி மாணவர்களை மத அடிப்படையில் திசை திருப்புவது வருத்தம் அளிக்கிறது.
ஏப்.,24ல் மதுரையில் தென் மண்டல ரயில்வே ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் தென் மாவட்ட மக்களின் பிரச்னைகள் குறித்தும் கூடுதல் ரயில்கள் இயக்குவதன் அவசியம் குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்படும் என்றார்.