தங்கம் விலை உச்சம் தொடும்; தனுஷ்கோடியை புயல் தாக்கும்: பஞ்சாங்கம் வாசிப்பில் தகவல்

15 சித்திரை 2025 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 365
தங்கம் விலை உச்சம் தொடும்; தனுஷ்கோடியில் புயல் பாதிப்பு ஏற்படும்' என, ராமேஸ்வரம் கோவிலில், விசுவாவசு பஞ்சாங்கம் வாசித்த போது தெரிவிக்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சிறப்பு பூஜை முடிந்ததும், குருக்கள் சிவமணி பஞ்சாங்கம் வாசித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
நம் நாட்டில் அதிகமான மழை, வெயில், குளிர் நிலவும். விவசாயம் செழித்து விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். உலகளவில் அரசியல் மாற்றம் ஏற்படும். மத மோதல்கள் மற்றும் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் உள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் நீடிக்கும். மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டங்களை இயற்றும். தங்கம், வெள்ளி விலை உச்சம் தொடும்; வைரம் விலை குறையும். ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பும், புயலும் வீசக்கூடும்.
1 கி.மீ., தூரத்திற்கு கடல் உள்வாங்கி மீன்கள் பாதிக்கப்படும். சென்னை, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும். புதிய வைரஸ் நோய்கள் பரவும். இவ்வாறு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.