பிள்ளையானுடன் பேச முயற்சித்த ரணிலுக்கு அனுமதி மறுப்பு

15 சித்திரை 2025 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 388
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் உள்ள ‘பிள்ளையான்’ எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்து, உரிய வாய்ப்பை கோரியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்புக்காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் கலந்துரையாடுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இருப்பினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையிலும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.