அடையாளம் தெரியாத இராணுவ வீரன்!
5 கார்த்திகை 2016 சனி 10:06 | பார்வைகள் : 19618
யுத்தங்களில் ஈடுப்பட்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு எல்லா நாடுகளிலும் அஞ்சலி செலுத்தும் முகமாக அடையாள சின்னம் ஒன்றையோ, அல்லது நினைவுச் சிலைகளையோ நிர்மாணிப்பார்கள். அதுபோல் நம்நாட்டில் இராணுவ வீரர்களுக்கான எண்ணற்ற நினைவுச்சின்னங்கள், வளைவுகள் உள்ளன என்பது வாசகர்கள் அறிந்ததே. சரி... உங்களுக்கு "அடையாளம் தெரியாத இராணுவ வீரன்" குறித்து தெரியுமா??!!
இதுவரை காலமும் இடம்பெற்ற அனைத்து யுத்தங்களின் போதும், உடல் சிதறி உயிரிழந்த, அடையாளம் காணப்படாத இராணுவ வீரர்களுக்காகவே அமைக்கப்பட்டதுதான் இந்த 'Tomb of the Unknown Soldier' எனும், 'அடையாளம் தெரியாத இராணுவ வீரனின் கல்லறை!' ஆகும். முதலாம் உலகப்போர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கும் இந்த பழக்கம் உலகின் சகல நாடுகளிலும் இருக்கிறதாம்.
பெல்ஜியம், அவுஸ்திரேலியா, அர்ஜண்டீனா, பங்களாதேஷ், பிரேசில், கனடா, எகிப்த், செக் குடியரசு என நீளும் இந்த பட்டியலில்... நம் நாடும் உண்டு. எங்கே என்றால்... Arc de Triomphe வளைவில். 'யுத்தமும் வீரர்களும்' நினைவாக அமைக்கப்பட்ட Arc de Triompheஇல், பெயர் தெரியாத இராணுவ வீரர்களுக்காக 'பொத்தாம் பொதுவாக' ஒரு சிலையை அமைத்திருக்கிறார்கள். 'தெரியும். ஆனால் கடவுளுக்கு மாத்திரம்!' என குறிப்பிடப்படும் இந்த முகம் தெரியாத இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் ஒன்றும் உள்ளது. நவம்பர் 11ம் திகதி அன்று இந்த இராணுவ வீரர்களை நினைவு கூரப்பட்டு வருகிறது 1918ஆம் ஆண்டில் இருந்து!!
இது தவிர, இந்த சின்னத்துக்குக்கு மேல் இராணுவ வீரர்களுக்கான அணையா தீபம் ஒன்றும் இங்கு உள்ளது. இதுவும் 1918ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனி நீங்கள் Arc de Triompheஐ கடக்கும் போதோ... பார்க்கும் போதோ இந்த முகம் தெரியாத இராணுவ வீரர்களையும் நினைவு கூருங்கள்!