எல்லைப் பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்

10 வைகாசி 2025 சனி 11:12 | பார்வைகள் : 145
எல்லைப் பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை பகுதியில், பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, பெரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா உள்ளிட்ட 26 இடங்களில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் உள்ளூர் மக்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களும் கண்காணிக்கப்பட்டு எதிர்- டிரோன் அமைப்புகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் தாக்குதல் நடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டு வருகிறது.
தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில் தேவையில்லாமல் வர கூடாது. உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பீதி தேவையில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.