Paristamil Navigation Paristamil advert login

'ஆப்பிரிக்கா'வை லியோன் நகரில் சிறை வைத்த பிரான்ஸ்!!

 'ஆப்பிரிக்கா'வை லியோன் நகரில் சிறை வைத்த பிரான்ஸ்!!

21 ஆனி 2016 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 18893


ஆப்பிரிக்கா ஒரு அழகிய கண்டம். அடத்தியான கானகங்களும், பழங்குடி இனத்தவர்களும்... அவர்களின் கலாச்சாரங்களும் என ஆப்பிரிக்கா ஒரு 'பாரம்பரிய' பூமி! அப்படிப்பட்ட ஆப்பிரிக்கா கண்டத்தில் கிடைத்த அரியவகை பொருட்கள், பண்டையகால கருவிகள், சிலைகள் அனைத்தையும் பிரான்ஸ் தனது லியோன் நகரில் பாதுகாத்து வைத்திருக்கிறது! 
 
வாருங்கள்... நீங்கள் அவசியம் பார்க்கவேண்டிய 'Musée Africain de Lyon' அருங்காட்சியகத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
 
ஆப்பிரிக்காவுக்கு வெளியே ஆப்பிரிக்காவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுவாகும். லியோன் நகரில் உள்ள மிக பழமைவாய்ந்த அருங்காட்சியகமும் இதுவாகும். 
 
குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல முக்கிய 'பொக்கிஷங்களை' பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளது இவ் அருங்காட்சியகம். 
 
 1861 ஆண்டு, Society of African Missions குழுவினரால் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டது. அவர்கள் யார் என கேட்டால்... அவர்கள் ரோமல் கத்தோலிக்க திருச்சபை அமைப்பை சேர்ந்தவர்கள். 
 
அதன் பின்னர், பல வருடங்கள் கழித்து 1998 ஆம் ஆண்டில் நிர்மாண பணிகள் ஆரம்பித்தன. புதிய கட்டிடங்கள் கட்டி வெள்ளை அடித்து 'பிரம்மாண்டமாய்ய்ய்ய்ய்ய்' என 2001ஆம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி மீண்டும் திறந்தார்கள். 
 
இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம்  2,126 'மாஸ்ட்டர்பீஸ்'கள் இருக்கின்றனவாம். (அப்பாடா... ஒரே நாளில் பார்த்துவிடலாம்!!) மொத்தம் மூன்று பிரிவுகளாக பிரித்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.
 
ஆப்பிரிக்கர்களின் தின வாழ்க்கை, சமூக வாழ்க்கை, மதம் சார்ந்த வாழ்க்கை என முப்பிரிவுகளாக பிரித்து அவர்களின் வாழ்வியலை நமக்கு எளிதாக புரிய வைத்துவிடுகிறார்கள். 
 
மேற்கண்ட அருங்காட்சியகத்தின் பெயரை இணையத்தில் தேடினால், அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி கிடைக்கும். அங்கே வருடங்களின் பிரகாரம் அவர்களின் செயல்பாடுகளை பதிவேற்றி வைத்திருக்கிறார்கள். கூடவே பல புகைப்படங்களையும் பதிவேற்றியிருக்கிறார்கள். 
 
அருங்காட்சியகத்தின் முகவரி  150, Cours Gambetta, Lyon ஆகும். அவர்களின் இணையத்தளத்தில் திறந்திருக்கும் நேரம், நுழைவுச்சீட்டு விபரம், தொடர்பு இலக்கம் போன்றன கிடைக்கின்றன.
 
அப்புறம் என்ன?! ஐரோப்பாவில் இருந்துகொண்டு ஆப்பிரிக்காவை பார்க்க சிறந்த வழி... லியோனுக்கு பயணமாகுவதுதான்!! போய்வாருங்கள்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்