பிரான்சின் முதல் 'செய்தித்தாள்'!!
16 ஆனி 2016 வியாழன் 10:31 | பார்வைகள் : 19074
பிரெஞ்சு மக்களுக்கு எதையாவது வாசிக்கவேண்டும்! எப்போதும் வாசிக்கவேண்டும்! தமிழ் மொழிபோல் அரும் பெரும் பெருமை கொண்ட பிரெஞ்சு மொழியில் 'அச்சுப் பதிப்பு' என்பது பண்டைய வரலாறு!!
பதினேழாம் நூற்றாண்டிலேயே பிரான்சில் பத்திரிகை வெளிவந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிரான்ஸ் முழுவதும் எண்ணற்ற பத்திரிகைகள், வாராந்தி என இறைந்து கிடக்கிறது. இவற்றுக்கெல்லாம் மூலமாக இந்த அந்த பத்திரிகை பற்றி தேடி அறிந்துகொள்வோம்!!
பிரான்சின் முதல் பத்திரிகையாளராக அறியப்பட்டவர் Théophraste Renaudot. இவர் தான் பிரான்சில் முதல் பத்திரிகையை தொடங்கினார். 30ம் திகதி, மே மாதம் 1631ஆம் ஆண்டு. La Gazette என்பது பத்திரிகையின் பெயர். பின்னர் அது Gazette de France என பெயரை மாற்றிக்கொண்டு விற்பனையாகியது.
இது ஒரு வாரப்பத்திரிகை ஆகும். அரசியலையும் இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றியும் எழுதி வந்த பத்திரிகை, பின்நாட்களில் உள்ளூர் செய்திகளையும் உலக செய்திகளையும் பிரசுரிக்க ஆரம்பித்தது. இருந்தும், பல சிக்கல்களையும் கெடுபிடிகளையும் சந்தித்தது.
ஒரே ஒரு தாளில் அச்சடிக்கப்பட்டு, அதை எட்டு பக்கங்களாக மடித்து விற்பனை செய்து வந்தார்கள். முதல் பக்கத்தில் Gazette என்ற பெயர் உட்பட சில பத்தி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டன. சில இதழ்கள் கையெழுத்து பிரதியாகவும் வெளிவந்ததாக குறிப்பிடப்படுகிறது.
பிரான்சின் முதல் பத்திரிகை என அறியப்படும் இந்த Gazette, பல சிக்கல்கள் முரண்பாடுகளை சந்தித்திருந்தாலும் இரண்டு நூற்றாண்டுகளை முழுமையாக கடந்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பத்திரிகை 1915 ஆண்டு தன் சேவையை நிறுத்திக்கொண்டது.