பிரெஞ்சு தாடி!
15 ஆனி 2016 புதன் 10:59 | பார்வைகள் : 21254
பிரெஞ்சு தாடி பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது.. என யோசிக்காதீர்கள்! பிரெஞ்சு தாடி இப்போது உலகம் முழுவது மிக 'ஃபேமஸ்'!
பிரான்சில் தோற்றம் பெற்ற இந்த வகை தாடி, பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவி.. கடல் கடந்து.. கண்டம் கடந்து இலங்கை இந்தியாவரை சென்றுவிட்டது. ஆனால் என்ன... இலங்கை இந்தியாவில் சிலர் இதை 'ஆட்டுத்தாடி' என்கிறார்கள்.
மனித இனம் தோற்றம்பெற்ற போது.. அனைவரும் முனிவர்கள் போல் தாடி வைத்திருந்தனர். முடியை வெட்டினால் வலிக்காது என தெரிந்துகொள்ளவே மனித குலத்துக்கு அரைநூற்றாண்டுகள் தேவைப்பட்டது என எழுத்தாளர் மதன் குறிப்பிடுகிறார்.
இருக்கட்டும், பிரெஞ்சு தாடிக்கு பின்னால் பெரிய அளவு 'ஃப்ளாஷ்பேக்' எதுவும் இல்லை. ஆனால் முதன் முதலாக அந்த ஆட்டுத்தாடி 'ஸ்டைலை' பிரான்சை சேர்ந்த van dyke என்பவர் வைத்திருந்தாராம். அதன் பின்னர் தான் ஐரோப்பா முழுவதும் பரவியதாம். இரண்டு கன்னங்களிலும் தாடியை மழித்து, மீசையுடன் சேர்த்து தாடைப்பகுதியில் கொஞ்சம் முடியை மழிக்காமல் விட்டால் அதுவே 'பிரெஞ்சு தாடி'!!
இங்கிலாந்து அரசர்கள் மன்னர்கள் எல்லாம் தாடியை நீளமாக வளர்த்து, சுருட்டி புது புது 'ஸ்டைல்' விட்டுக்கொண்டார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூட பிரெஞ்சு தாடி தான் வைத்திருந்தார்.
பிரபல சினிமா நடிகர்களான கிரிஸ்டியன் பாலே, ஜானி டிப் போன்றவர்கள் எல்லாம் பிரெஞ்சு தாடி பிரியர்கள் தாம். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்!' திரைப்படத்தில் ஜானி டிப் வைத்திருந்த பிரெஞ்சு தாடி, அமெரிக்கர்களிடம் பெரும் பரபரப்பானது. அதன் பின்னர் பல அமெரிக்கர்கள் ஆட்டுத்தாடியுடன் அலைந்தார்களாம்...!!