ஈஃபிளுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அது பிரான்சுக்கு இல்லையோ??!!
14 ஆனி 2016 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 19461
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ஈஃபிள் கோபுரத்தை கட்டிமுடித்த ஆரம்ப நாட்களில் இதை வைத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை... ஒருவருக்கும்! எத்தனையோ 'உப்புச் சப்பில்லாத' வேலைகளையெல்லாம் தாங்கிக்கொண்டது ஈஃபிள். கோபுரத்தில் பெரிய 'ஸ்பீக்கரை' கட்டி அரச செய்திகளை தினமும் அரைமணி நேரம் அறிவித்தார்கள். பின்னர் சில வருடம் கழித்து ஈஃபிளை 'ரேடியோ ஸ்டேஷ'னாக பயன்படுத்தினார்கள். இதையெல்லாம் மன்னித்து விட்டுவிடலாம்! ஆனால் செய்தார்களே ஒரு வேலை....
பிரான்சின் மகிழுந்து தயாரிப்பாளர்களான Citroën நிறுவனத்தினர், தங்கள் நிறுவனத்தினை விளம்பரப்படுத்த ஈஃபிளை கேட்டார்கள். அதிகாரிகளும், சும்மாதானே கிடக்குது கழுத.. என நினைத்து, தளபதி படத்துல ரஜினி சொல்வது போல் 'எடுத்துக்கோ!' என சொல்லிவிட்டார்கள்.
விளம்பர பிரியர்களான Citroën நிறுவனம் ஏற்கனவே, ஆகாயத்தில் விமானத்தை கொண்டு புகை எழுப்பி தங்கள் நிறுவனத்தின் பெயரை எழுதி 'அட்டேன்ஷன் ப்ளீஸ்' என பீதி கிளப்பியவர்கள். இருநூறு சொச்சம் மைல்களுக்கு குறையாமல் Citroën எனும் பெயரை எழுதி அழிச்சாட்டியம் செய்தவர்கள். அவர்கள் கையில் ஈஃபிள் கிடைத்தால்??!!
1925ஆம் வருடம் அது. ஒரு கலைப்படைப்பை கண்டம் பண்ணுகிறோம் என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல் ஈஃபிளின் மூன்று பக்கங்களில் Citroën எனும் பெயரை மின் குமிழ்கள் கொண்டு பெரிதாக உருவாக்கினார்கள். மொத்தம் 92 மீட்டர்கள் உயரம்.. மூன்று பக்கங்களிலும். இரவு நேரத்தில் ஈஃபிள் கோபுரத்தில் பெரிதாக Citroën எனும் பெயர் தோன்றியது. மக்களும், 'அடடே... எவ்ளோ பெருசா இருக்கூ..??!' ஆச்சரியமாக பார்த்தார்கள். (இப்போது அப்படி செய்தால் நாடுழுவதும் புரட்சி போராட்டம் நடத்துவார்கள்... அதை விடுங்கள்) பல வருடங்கள் இந்த விளம்பரம் ஈஃபிளை மறைத்துக்கொண்டு இருந்தது. பின்னர் தான் சுதாகரித்துக்கொண்ட அரசு.. 'செல்லாது செல்லாது' என ஒப்பந்தத்தை ரத்து செய்து... ஈஃபிளை காப்பாற்றிக்கொண்டது. அதன் பின்னர் எந்த ஒரு விளம்பரமும் ஈஃபிளில் வைக்கப்படவில்லை.
ஈஃபிளை சுற்றி பல விளம்பரங்களை தொங்கவிட்டு, 'நோட்டீஸ் போர்ட்' மாதிரி காட்சியளித்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்??! அப்படி ஒன்று நேர்ந்தால் நானெல்லாம் பிரான்சை காலிசெய்துகொண்டு வேறு நாட்டுக்கு சென்றுவிடுவேன்... எங்கிறீர்களா??!!
சரிதான்!