Paristamil Navigation Paristamil advert login

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!

13 வைகாசி 2025 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 181


பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார். முப்படை வீரர்களுக்கு 'சல்யூட்' அடித்து நன்றி சொன்ன அவர், ''அணுகுண்டு மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; பாகிஸ்தான் பிழைக்க வேண்டுமானால், பயங்கரவாத ஆதரவை கைவிடுவதே ஒரே வழி,'' என திட்டவட்டமாக தெரிவித்தார். 'போர் நிறுத்தத்துக்கு நானே காரணம்' என பெருமை பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை, தன் உரையில் எந்த இடத்திலும் குறிப்பிடாமல் பிரதமர் மோடி தவிர்த்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஆற்றிய உரை:

ஆப்பரேஷன் சிந்துாரை வெற்றிகரமாக நடத்திய நம் முப்படையினர், உளவுத் துறை, விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்கும், நாட்டு மக்கள் சார்பில் மிகப்பெரிய சல்யூட்.

ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக அளப்பரிய வீரத்தை நம் வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். விடுமுறையை அனுபவிக்க வந்த அப்பாவிகள் மீது, மதத்தின் பெயரில் கொடூர தாக்குதல் நடத்தினர். நாட்டு மக்கள் பரஸ்பரம் கொண்டுள்ள நல்லெண்ணத்தை உடைக்க இந்த சதி நடந்தது.

இந்த தாக்குதலுக்கு பின், நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியில் திரண்டனர். பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்க பாதுகாப்பு படையுடன் நாம் கைகோர்த்தோம். பயங்கரவாத அமைப்புகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பரேஷன் சிந்துார் என்பது வெறும் பெயர் அல்ல. கோடிக்கணக்கான இந்தியர்களின் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடு இது.

மே 6 நள்ளிரவு துவங்கி, மே 7 அதிகாலை வரையில் பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்திராத வகையில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது, இந்தியா துல்லியமான தாக்குதல் நடத்தி அழித்தது.

பஹவல்பூர், முரீத்கே போன்ற பயங்கரவாத முகாம்கள், சர்வதேச பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக திகழ்ந்தன.

உலகின் மற்ற பகுதிகளில் நடந்த அனைத்து வகையான பயங்கரவாத தாக்குதல்களுக்கும், இந்த இடங்களில் இருந்து தான் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள், நம் சகோதரிகளின் குங்குமத்தை பறித்தனர். எனவே தான், குங்குமத்தை குறிக்கும் சிந்துார் என்ற பெயரில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.

அவர்கள் மூன்றாண்டுகளாக பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்தனர். அந்த கொடூரக்காரர்களை நம் படைகள் ஒரே நாளில் தீர்த்துக்கட்டின.

இந்தியாவின் இந்த செயலால் பாகிஸ்தான் மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. அந்த ஏமாற்றத்தால் பாகிஸ்தான் மீண்டும் ஒரு தவறு செய்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடும் இந்தியாவுக்கு கைகொடுக்காமல், நம் மீதே பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.

கோவில்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், ராணுவ முகாம்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளை பாக்., படைகள் தாக்கின.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் நம் படைகளால் சாம்பலாக்கப்பட்டதை உலகம் உற்று பார்த்தது.

பாகிஸ்தான் தயாரித்த ட்ரோன்கள் எல்லையைக் கூட தாண்டவில்லை. ஆனால், நம் வீரர்களின் ஆயுதங்களும், வாகனங்களும், தாக்குதல்களும் எல்லையை கடந்து வெகுதுாரம் வரை சென்று எதிரிகளை அழித்தன.

முதல் மூன்று நாட்களிலேயே நம் படைகள் பாகிஸ்தானை நிலைகுலைய செய்துவிட்டன. அது, அழிவில் இருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லாத நிலை ஏற்பட்டது.

அதனால், 10ம் தேதி மதியம் பாக்., ராணுவ தலைமை, நம் ராணுவ தலைமையை தொடர்பு கொண்டது; போதும் நிறுத்திவிடலாம் என்றது.

அதற்கு முன்பே பயங்கரவாதிகளை நம் படைகள் வேரோடு அழித்திருந்தன. அவர்களின் முகாம்களை நாம் சுக்குநுாறாக்கியிருந்தோம்.

பயங்கரவாதிகளும், பாக்., ராணுவமும், இந்தியாவுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தான், அவர்களின் கோரிக்கையை ஏற்று, ராணுவ நடவடிக்கையை நாம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

வரும் காலங்களில் பாகிஸ்தான் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து இந்த நிலைப்பாடு நீடிக்கும் அல்லது மாறுபடும்.

நம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், மிகப் பெரிய அளவில் பதிலடி தரப்படும் என்பதை அவர்களுக்கு தெளிவாக உணர்த்தி உள்ளோம்.

அணு ஆயுதம் வைத்திருக்கிறோம்; பயன்படுத்துவோம் என்ற மிரட்டல்கள் எல்லாம் இந்தியாவிடம் பலிக்காது. நாங்கள் அதற்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல. அப்படிப்பட்ட மிரட்டல் விடுப்பவர்களுக்கு இந்தியா சரியான பதிலடி தரும்.

ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக நம் படைத்திறனை இந்த உலகமே பார்த்துள்ளது. அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்கு இது மிகப் பெரிய எச்சரிக்கை.

யுத்த களத்தில் பாகிஸ்தானை நாம் பல முறை வென்றுள்ளோம். இந்த முறையும் நம் திறனை வெளிப்படுத்தியுள்ளோம். நம், 'மேட் இன் இந்தியா' ஆயுதங்களின் திறன் வெளிப்பட்டுள்ளது. 21ம் நுாற்றாண்டு போரில், மேட் இன் இந்தியாவின் மகத்துவம் வெளிப்பட்டுஉள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்பது மிகப்பெரிய வெற்றி. இது போருக்கான யுகம் அல்ல. அதே சமயம் இந்த யுகம் பயங்கரவாதத்திற்கானதும் அல்ல.

பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானையே அழித்து விடும். அவர்கள் பிழைக்க வேண்டுமானால், பயங்கரவாத ஆதரவை கைவிட வேண்டும். பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒரு சேர நடக்காது. ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது.

இது புத்த பூர்ணிமா திருநாள். பவுத்தம் அமைதியை, சாந்தியை வலியுறுத்துகிறது. அமைதியுடன் கூடிய முன்னேற்றத்தால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். அதே சமயம், தேவைப்படும் நேரத்தில் சக்தியின் பயன்பாடும் இருக்கும்.

பாரத் மாதா கீ ஜெய்!

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமரின் பேச்சுக்கு சில மணி நேரங்கள் முன், 'போர் நிறுத்தத்துக்கு நானே காரணம்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போல பெருமை பேசினார். ஆனால், தன் உரையில் டிரம்ப் குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாதுர்யமாக தவிர்த்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்