பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை

13 வைகாசி 2025 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 186
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ., விசாரணை நடத்திய இந்த வழக்கில், சபரிராஜன்,32, திருநாவுக்கரசு,34, சதீஷ்,32, வசந்தகுமார்,30, மணிவண்ணன்,32, பாபு,33, ஹெரன் பால்,32, அருளானந்தம்,38, மற்றும் அருண்குமார்,32, ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, 2019ம் ஆண்டு மே, 21ல் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு 'இன்கேமரா' முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு அளித்தார்.
வாழ்நாள் முழுவதும் சிறை
இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினிதேவி அதிரடி தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதன்படி அவர்கள் 9 பேரும், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிப்பட்டுள்ளது.
முன்னதாக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒன்பது பேரும் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பின்னணி என்ன?
* கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
* இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் அண்ணா அடிக்காதீர்கள் என்று கதறும் வீடியோ வெளியாகி, வழக்கின் மீதான முக்கியத்துவத்தை அதிகரித்தது.
* இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மொபைல் போனில் இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் மொபைல் போன் தான் குற்றவாளியை பிடிக்க உதவியாக இருந்தது.
* 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
* 2019ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.
* இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
* சி.பி.ஐ., விசாரணைக்கு பிறகு இதே வழக்கில் மேலும் அருளானந்தம், பாபு, ஹெரன் பா் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
* 9வது நபராக அருண் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
* இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து இன்று 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு தரப்பு கோரிக்கை ஏற்பு
முன்னதாக, மத்திய அரசு சிறப்பு வக்கீல் சுரேந்திர மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொள்ளாச்சி வழக்கில், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்தல் என்ற 2 பெரிய குற்றங்கள் அடிப்படையில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு தரப்பில் விடுக்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் தரப்பில் மேல் முறையீடு செய்தாலும், இந்த தண்டனையே நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றே நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று, குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேருக்கும் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சாட்சிகளுக்கு சபாஷ்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்த 50க்கும் மேற்பட்டோரில் யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை.