'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Robert Houdin!!
13 ஆனி 2016 திங்கள் 11:27 | பார்வைகள் : 19164
சுவாரஷ்யமாக ஏதும் செய்பவர்களை குழந்தைகளுக்கு பிடிக்கும். அதுவும் 'மேஜிக்' செய்பவர்களை கண்டால் குழந்தைகள் மட்டுமல்ல... அனைத்து வயதினரும் தான் ரசிப்பார்கள். 'இவரு நம்மூர்ல பெரிய நாதஸ்வர வித்துவானுங்க!' என கவுண்டமணியை அறிமுகம் செய்வதுபோல், இன்று சிகரம் தொட்ட மனிதராக நாம் பார்க்கப்போவது... 'இவரு நம்மூர்ல பெரிய மேஜிக்காரருங்க!!'
பிரான்சின் Blois நகரில், டிசம்பர் 6, 1805 ஆண்டு பிறந்த இவருடைய தாயார் சிறுவயதிலேயே இறந்துவிட, தாயின் அரவணைப்பு இல்லாமலேயே வளர ஆரம்பித்தார் ரொபேட். Orléans பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பு படித்து பட்டதாரி ஆனாலும், தன்னுடைய அப்பாவின் தொழிலான கடிகாரம் உருவாக்குதல்/ திருத்துதல் தொழிலையே செய்துவந்தார்.
ஒருநாள், 'கடிகாரம் திருத்துவது எப்படி?' வகையறா புத்தகங்கள் சிலவற்றை ஒரு கடையில் வாங்கி வீட்டுக்கு வந்தார் ரொபெட், வீட்டுக்கு வந்ததும் தான் அந்த புத்தகங்களோடு 'மேஜிக் செய்வது எப்படி?!' என்ற புத்தகங்கள் இரண்டு இருப்பதை கண்டு வியக்கிறார். அது ஒன்றும் மேஜிக் இல்லை. கடைக்காரர் தவறுதலாக வைத்து அனுப்பி விட்டார். ஆனால் புத்தகம் மாறிப்போய் இருப்பது ரொபேட்டுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதுவே அவரை மேஜிக் பக்கமாய் திருப்பியது.
அந்த புத்தகங்களை வழிகாட்டியாய் வைத்து, தனக்குத்தானே மேஜிக் கற்பித்துக்கொண்டார். உள்ளூர் மேஜிக் காட்டும் நபர் ஒருவரிடம் உதவியுடன் மேலும் சில யுக்திகளை கற்றுக்கொண்டார். கடிகாரம் திருத்தும் துருதுரு மூளையும்... மேஜிக் மேல் இருந்த ஆர்வமும் மிக வேகமாக ரொபேட்டை மேஜிக் வித்தகனாக மாற்றியது. அதன் பின்னர் அவர் திருமணம் செய்துகொண்டு, தன் மனைவியையும் கூட்டிக்கொண்டு பரிசுக்கு வந்து மீண்டும் 'ஐயாம் எ வாட்ச் மெக்கானிக் மேடம்!' என '24' சூர்யா போல் பழைய தொழிலையே செய்யலானார்.
கடிகாரம் திருத்துவது தொழிலாக கொண்டாலும், மேஜிக் மேல் இருந்த ஆர்வத்தை விடாமல் பிடித்துக்கொண்டார். பரிசுக்குள் இருக்கும் பல மேஜிக் 'வாத்தியார்'களிடம் கற்க தொடங்கினார். புதிய யுக்திகள் எல்லாம் அவருக்கு தோன்றியது. ஆனால் அதை மேடை ஏற்ற தான் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் தன்னுடைய 'ஐடியாக்களை' ஒரு புத்தகமாக வெளியிட்டார். அது அத்தனை பிரமாதமாக கைகொடுக்கவில்லை என்றாலும் விற்பனையின் பின்னர் கையில் கொஞ்சம் பணம் மிஞ்சியது.
அதன் பின்னர் ரொபேட்டின் மனைவி இறந்துவிட, சிறிது காலம் கழித்து மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 1845 ஆம் ஆண்டு, 200 இருக்கைகள் கொண்ட ஒரு மேஜிக் திரையரங்கை திறந்து அதில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடாத்தினர். நான்கு, ஐந்து... அதிகபட்சம் பத்து பேர்கள் தான் அப்போது இருந்தனர். ஆனால் ரொபேட் சளைக்காமல் மீண்டும் பல புதிய யுக்திகளை கையாண்டார். விளம்பரங்கள், பரிசு போட்டிகள் என ரசிகர்களை ஈர்த்தார். மேஜிக் திரையரங்கிற்கு வரவழைத்தார். மீண்டும் புதிய புதிய வித்தைகளை செய்து காட்டினார். மக்களிடையே ஆரவாரம் பிய்த்துக்கொண்டது. மக்களுக்கு பிடித்தால் செல்லாக்காசு கூட தங்கக்காசு தான். தங்கக்காசு ஆனார் ரொபேட்.
ரொபெட்டின் மேஜிக் பேச்சு ஐரோப்பா முழுவதும் அடிபட்டது. தேசங்கள் கடந்தார். விக்டோரியா மகாராணிக்கு முன்னிலையில் பிரத்யேகமாக மேஜிக் செய்து காட்டினார். உலகம் முழுவதும் சுற்றுலா சென்று மேஜிக் செய்து காட்டி பிரான்ஸ் திருபியதும், பிரெஞ்சு அரசு அவரை ஒரு ரகசிய பணியில் அமர்த்தியது. அவர் அல்ஜீரியாவுக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் பிரான்சுக்கு வந்த அவர் சில வருடங்கள் அமைதியாக கழித்து, ஒரு சுய சரிதம் எழுதினார். பின்னர் ஜூன் மாதம் 13ம் திகதி 1871இல் நிமோனியா நோயால் இறந்தார். இன்று அவருடைய நினைவு தினமாகும்!