ஆறாயிரம் வருடங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டவர்கள்!
9 ஆனி 2016 வியாழன் 12:40 | பார்வைகள் : 20045
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைபோல் ஆகிவிட்டது இந்த ஆராய்ச்சியாளர்களின் கதை. 300 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தானிய கிடங்குகளை தேடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு, கிடைத்தது ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள்!
கிழக்கு பிரான்சின் Alsace பகுதியில் இந்த எலும்புக்கூடுகள் கிடைத்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து பேரின் எலும்புக்கூடுகள், அதில் ஐந்து ஆண்களுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் என தெரிவித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பிரான்ஸ் பத்திரமாக பாதுகாக்கும் பல பொருட்களில் எலும்புக்கூடுகளும் மிக முக்கியமானவை. பனிப்போரில் இறந்தவர்கள், உலகப்போரில் இறந்தவர்கள் என அளவுகணக்கில்லாமல் எலும்புக்கூடுகளை சேகரித்து, அது குறித்த தகவல்கள் அடங்கிய 'லேபிள்'கள் ஒட்டி, ஏதேனும் ஒரு அருங்காட்சியகத்தில் வைத்துவிடுவார்கள்.
இந்த எலும்புக்கூடுகளுக்கும் அதே நிலை தான் ஏற்படப்போகிறது. ஆனால் அதற்கு முன்னர் இந்த எலும்புக்கூடுகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யவிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சி குழு தெரிவித்திருக்கிறது. இந்த எலும்புக்கூட்டை இதுவரை ஆராய்ச்சி செய்ததில், இவர்கள் கற்கோடாலியால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாடீ....!!!