"Le Divorce" - பரிசில் படமாக்கப்பட்ட அமெரிக்க திரைப்படம்!
8 ஆனி 2016 புதன் 11:10 | பார்வைகள் : 19642
நாவலாசிரியர் Diane Johnson எழுதிய Le Divorce நாவலை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார் இயக்குனர் James Ivory. திரைப்படம் 2003ல் வெளியானது. "Le Divorce" என பெயர் வைக்கப்பட்டாலும்.. இது ஒரு ஹொலிவுட் திரைப்படம்.
பிரான்சில் கணவரோடு வசிக்கும் தன் கர்ப்பிணியான சகோதரியை காண அமெரிக்காவில் இருந்து பரிஸ் வருகிறாள் நாயகி. வந்ததன் பின்னர் தான் தெரிகிறது சகோதரியின் கணவர் அங்கு இல்லை என. எங்கே அவர் என தேடிச்சென்றால் ரஷ்யாவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் அவர். விவாகரத்து செய்யாமல் எப்படி தெரிமணம் செய்துகொண்டார் என கடுமையான பிரெஞ்சு சட்டத்துக்கு முகம் கொடுக்கவேண்டியதாய் மீதி படம் தொடர்கிறது...!!
திரைப்பத்தின் 90 வீத காட்சிகள் பரிசுக்குள் தான் படமாக்கியிருக்கிறார்கள். தினமும் பார்க்கும் பரிசை வேறு விதத்தில் திரையில் கொண்டுவந்திருப்பார் ஒளிப்பதிவாளர். முக்கியமாக சன நெரிசல் பகுதியான Café de Flore பகுதியில் முக்கியமான காட்சிகளை படமாக்கியிருப்பார்கள். ஈஃபிள் கோபுரம், லூவர் அருங்காட்சியகம் என முக்கியமான இடங்கள் எல்லாம் கதாப்பாத்திரங்களுக்கு பின்னால் வந்து செல்லும். குறிப்பாக திரைப்படத்தில் இறுதி காட்சிகளை ஈஃபிள் கோபுரத்தில் படமாக்கியிருப்பார்கள். வேறு எந்த திரைப்படங்களிலும் பார்க்கமுடியாமல் மிகவும் 'எக்ஸ்குளூசிவ்'வாக பார்க்கலாம்!
ஈஃபிள் கோபுரத்தை நான் ஏன் திரையில் பார்க்கவேண்டும்... நேரிலேயே பார்க்கலாமே... என யோசிக்கிறீர்களா... வாஸ்தவம் தான். ஆனால் நம்ம ஊரை மிக அழகா ஒரு அமெரிக்கன் திரைப்படத்தில் பார்க்கும் போது அது அலாதி இன்பம் தான் ஆனால்.....,
திரைப்படம் வெளியான பின் பலருக்கு கோபம் வந்தது. காரணம் நாவலாக படிக்கும் போது இருந்த சுவாரஷ்யம் விறுவிறுப்பு திரைப்படத்தில் இல்லை என்பதே! திரைப்படத்தை 'ஆறிப்போன காஃபி!' என விளித்தது நியூயார்க் டைம்ஸ்! பிரபல அமெரிக்க சினிமா விமர்சகர் Owen Gleiberman, 'செல்லாது செல்லாது... என்றா படம் எடுத்திருக்க நீயி??' எனும் ரீதியில் விமர்சனம் தெரிவிக்க... அதுவே படத்துக்கு விளம்பரமாகிப்போனது.
ஒருவழியாக முட்டி மோதி.. போட்ட பணத்தை வசூலித்து தப்பித்துக்கொண்டது "Le Divorce" திரைப்படம்!!