சிகரம் தொட்ட மனிதர்கள் - Emma Watson!!
6 ஆனி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 20605
'எம்மா வாட்சன்' ஒரு பிரெஞ்சு பெண் என்றால் எவருமே நம்பமாட்டார்கள் தான். 'என்ன அழகுடா அந்த பொண்ணு!' என இன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் எம்மா வாட்சனுக்கு பின்னால் இருக்கும் அசுர உழைப்பாளி வெளியில் தெரிவதில்லை. தன் கடின உழைப்பால் புகழின் உச்சிக்கு சென்ற எம்மா வாட்சன் இந்த வார 'சிகரம் தொட்ட மனிதராக!'
ஏப்ரல் 15, 1990 ஆம் ஆண்டு பரிசில் பிறந்த எம்மா வாட்சனுக்கு வயது 26. தாய் தந்தையர் இருவரும் சட்டத்தரணி. ஆனால் பெற்றோரோடு வாழ எம்மாவுக்கு கொடுத்து வைக்கவில்லை. எம்மாவுக்கு 5 வயது இருக்கும் போது தாய் - தந்தை இருவருக்குள்ளும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
பின்னர் தனது தாயார் மற்றும் சகோதரனுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர். Oxford பல்கலைக்கழத்தின் 'Theatre Arts' பாடசாலையில் படிக்க தொடங்கினார். எம்மாவுக்கு இயல்பிலேயே எதையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் திறமை இருந்தது. இசை கற்றுக்கொண்டார். பாடல் பாட கற்றுக்கொண்டார். நடனம் ஆட கற்றுக்கொண்டார்... அதன் பின்னே நடிப்பு கற்றுக்கொண்டார். நடிப்பில் அசாத்திய திறமை கொண்டிருந்தார் எம்மா வாட்சன்.
நடிப்பு எம்மாவுக்கு ஏழு வயதிலேயே கைவந்த கலை. James Reeves எழுதிய "The Sea'' கவிதையை பாடசாலை மேடையில் பலவித உணர்ச்சிகளுடன் நடித்தும் சொல்லியும் காட்டினார். கைதட்டல்கள் விண்ணை பிளந்தன. அப்போது எம்மாவுக்கு வயது வெறும் ஏழு!!
அதன் பின்னர் எம்மா வாட்சனுக்கு முதல் சினிமா வாய்ப்பு அவரது ஆசிரியர் மூலம் கிடைத்தது. பிரபல நாவலான 'ஹாரி பாட்டர்' நாவல் திரைப்படமாக எடுப்பதுக்குரிய நடிகர்கள் தேர்வு நடக்கும் 'ஓடிட்டோரியம்' அது. அங்கே எம்மாவை கூட்டிவந்தவர் அவரது ஆசிரியர். நடிகர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தவர் நாவலாசிரியர் ஜே.கே.ரெளலிங். எம்மா வாட்சனின் நடிப்பு திறமையை பார்த்து.. இவர் தான் தன் கதாப்பாத்திரத்துக்கு வேண்டும் என தெரிவித்தார் ரெளலிங். எம்மா வாட்சன் அதன் பின்னர் தான் தனது ஒன்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார்.
எம்மா வாட்சனுக்கு 11 வயது இருக்கும்போது 'ஹாரி பாட்டர்' தொடரின் முதலாவது திரைப்படம் வெளியானது. நவம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டு. $974 மில்லியன் வசூல் செய்த திரைப்படமாக அது மாறியது. உலகின் அத்தனை 'கமரா'க்களும் எம்மா வாட்சன் மேல் திரும்பியது.
அதை தொடர்ந்து 'ஹாரி பாட்டர்' தொடரின் அனைத்து திரைப்படங்களிலும் எம்மா வாட்சன் தன் நடிப்பு திறமையை காட்டினார். ஒரு சிறுமியாக தன் நடிப்பு திறமையை நிரூபித்த எம்மா வாட்சன், பின்னர் சில வருடங்கள் விடுப்பு எடுத்து... பருவப்பெண்ணாக மீண்டும் திரையில் தோன்றினார். ஃபேஷன் ஷோகளில் வலம் வரும் நம்பர்.1 மொடல் ஆனார்.
இந்த புகழ் அத்தனை எளிதாய் கிடைக்கவில்லை எம்மா வாட்சனுக்கு. விடாமுயற்சியும்... தன் திறமையை எங்கேயும் நிரூபிக்க தவறாத தைரிய குணமுமே எம்மா வாட்சனை சிகரம் தொட்ட மனிதராக்கியிருக்கிறது.