ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் : நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படையினர்

16 வைகாசி 2025 வெள்ளி 11:46 | பார்வைகள் : 109
ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கை மூலம் கடந்த 21 நாளில் நக்சல்களின் முதுகெலும்பை பாதுகாப்பு படையினர் உடைத்துள்ளனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததுடன்,ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
31 நக்சல் கொலை
நாடு முழுதும் 2026 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுதும் நக்சலைட் பயங்கரவாதத்தை ஒழக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசு,இதற்காக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஏராளமான நக்சலைட்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ' ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' என்ற நடவடிக்கையை மாவோயிஸ்ட்களுக்கு எதிராக மத்திய அரசு துவக்கியது. இதன்படி கடந்த ஏப்.,21 முதல் மே 11 வரையிலான 21 நாட்களில் சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீசார் இணைந்து 31 நக்சலைட்களை சுட்டுக் கொன்றனர். இவர்களில் அந்த அமைப்பின் முக்கியமானவர்களும் அடக்கம். அவர்களின் தலைக்கு ரூ.1.72 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
தப்பியோட்டம்
மேலும் இந்த சோதனையில், அவர்களின் 214 மறைவிடங்கள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. 450 ஐஇடி வகை குண்டுகள், 818 பிஜிஎல் குண்டுகள், டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12 ஆயிரம் கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினரின் அதிரடிக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஏராளமான நக்சலைட்கள் தப்பியோடினர். பலர் சரணடைந்தனர்.
பாதுகாப்பு படை முகாம்
பாதுகாப்புபடையினரின் இந்த நடவடிக்கைக்கு சத்தீஸ்கரின் கல்ஹாம் பகுதியில் 2022ம் ஆண்டு அமைக்கப்பட்ட முகாம் முக்கிய பங்கு வகித்தது. இங்கு தான் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டன. இங்கிருந்துதான் தகவல்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
சிஆர்பிஎப் அதிகாரி ஆனந்த் கூறியதாவது: ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓட வேண்டிய நிலை நக்சல்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு படையினரே காரணம். இங்கிருந்து சென்று அவர்கள் மலைப்பகுதிகளில் மறைந்துள்ளனர். இனிமேல், இந்த பகுதி நக்சல்களுக்கு புகலிடமாக இருக்காது.
மார்ச் மாதத்திற்குள் நக்சல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலக்கு நிர்ணயித்து உள்ளார். இதனை கருத்தில் கொண்டு இங்கு முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக, கல்ஹாம் பகுதியை தங்களின் பாதுகாப்பான புகலிடமாக கருதிய நக்சல்கள் தற்போது மலை பகுதிகளுக்கு தப்பிச்சென்றனர். இங்கு அவர்கள் திரும்பி வராதபடி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றார்.
மக்கள் நம்பிக்கை
மற்றொரு அதிகாரியான குமார் மணீஷ் கூறுகையில், கடந்த சில மாதங்களாக, தெற்கு பஸ்தர் பகுதியில் இருந்த நக்சல்கள், தெலுங்கானாவை சேர்ந்தவர்களுடன் இங்கு மறைந்து இருந்தனர். இதனால், இங்கு 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கையை துவக்க வேண்டியிருந்தது. இங்கு உள்ளூர் மக்களுடன்இணைந்து செயல்படுகிறோம். அரசின் திட்டங்களின் பலன்கள் அவர்களுக்கு கிடைக்கச் செய்கிறோம். அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.இதன் காரணமாக நக்சல்களின் ஆதிக்கம் இங்கு முடிவுக்கு வந்துள்ளது என்றார்.