அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் முன்னாள் இலங்கை வீரர்

16 வைகாசி 2025 வெள்ளி 07:12 | பார்வைகள் : 122
அமெரிக்க கிரிக்கெட் அணி பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
54 வயதான புபுது தசநாயக்க, அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 2வது முறையாக தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார்.
புபுது தசநாயக்க, 1990களின் முற்பகுதியில் இலங்கை அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அதன் பிறகு கனடாவுக்கு குடிபெயர்ந்த அவர், கனடா தேசிய அணிக்கு தலைமை தாங்கினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கனடா தேசிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.
கனடா அணி ஒருநாள் போட்டி அந்தஸ்தை மீண்டும் பெறவும், 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவும் வழிவகுத்தார்.
மேலும், நேபாள அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில், அந்த அணி 2014 T20 உலககோப்பைக்கு தகுதி பெற்றது.
முன்னதாக, 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார்.
தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய புபுது தசநாயக்க, "அமெரிக்க ஆண்கள் தேசிய அணிக்குத் திரும்பி வந்து தலைமை தாங்குவது ஒரு மரியாதை. நான் இங்கு இருந்த முந்தைய காலத்தில் நாங்கள் சாதித்ததைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
மேலும் இந்த குழுவில் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவதற்கான மகத்தான ஆற்றலைக் காண்கிறேன். அமெரிக்க கிரிக்கெட்டுக்கு அர்த்தமுள்ள ஒன்றைத் தொடர்ந்து உருவாக்க வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்." என தெரிவித்துள்ளார்.