கிரிப்டோநாணயத் துறையில் தொடரும் கடத்தல்கள் - உள்துறை அமைச்சர் சந்திப்பு

16 வைகாசி 2025 வெள்ளி 13:40 | பார்வைகள் : 556
கிரிப்டோநாணயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்களை கடத்தும் முயற்சிகள் மற்றும், அடைத்து வைக்கும் சம்பவங்கள் பிரான்ஸில் அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த வகையில், ப்ருனோ ரத்தையோ, இன்று வெள்ளிக்கிழமை, மே 16ஆம் தேதி, இந்தத் துறையில் உள்ள பல தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.
வளரும் ஆபத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிப்டோநாணயத் துறையில் உள்ளவர்களை உள்துறை அமைச்சர் இந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு, இந்தத் துறையில் உள்ள தொழில்முனைவோர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் நடைபெறுகிறது.
«பிரான்ஸில் சிலர் உள்ளனர், அவர்கள் கிரிப்டோநாணயங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து, அவர்களின் பாதுகாப்புக்காக நாம் வேலை செய்ய வேண்டும். அவர்கள் இந்த ஆபத்துகளைப் புரிந்து கொள்வதற்கும் இந்தச் சந்திப்பு உதவும்» என உள்துறை அமைச்சர் ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார்.
«நாம் ஒன்றாகவே அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் இந்த கடத்தலுக்குப் பின்னணயில் இருப்பவர்கள், அவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் கூட, அவர்களை நிச்சயமாக கண்டுபிடிப்போம்» எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
பாரிஸில் இரட்டை கடத்தல் முயற்சி
கடந்த சில மாதங்களில், கிரிப்டோநாணயத்தில் சிறப்பு பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கெதிராக பல கடத்தல் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. சமீபத்திய சம்பவம் இந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் நகரின் மையத்தில் நடந்தது.
முகம் மூடிய சில நபர்கள், Paymium எனும் பரிமாற்றத் தளத்தின் தலைமை செயல் அதிகாரியின் மகளையும் அவரது சிறிய வயதுடைய பேரனையும் கடத்த முயன்றனர்.
இதையடுத்து, அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 'இந்தத் துறையில் உள்ள நிறுவன ஊழியர்களை பாதுகாக்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டது.
மே மாதத்தின் தொடக்கத்தில், கிரிப்டோ நாணயங்களால் செல்வம் சேர்த்த ஒரு நபரின் தந்தை, பாரிஸிலேயே முகமூடிய நால்வரால் கடத்தப்பட்டு, இரண்டு நாட்களுக்கு பின்னர் காவற்துறையினரின் அதிரடி நடவடிக்iயால் விடுவிக்கப்பட்டு கடத்தல்காரர்கள் பலர் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இவர்கள் இலங்கைத் தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளது. இவரது ஒரு விரலும் வெட்டப்பட்டிருந்தது.