வெள்ளவத்தையில் நினைவேந்தலை குழப்ப முயன்ற குழுவினரால் குழப்பநிலை

18 வைகாசி 2025 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 194
கொழும்பு வெள்ளவத்தையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற வேளை அதனை குழப்புவதற்கு சிறிய குழுவொன்று முயற்சிகளில் ஈடுபட்டது.
அப்பகுதியில் காலை முதல் கடும் பொலிஸ் பாதுகாப்பு காணப்பட்ட போதிலும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினர் அந்த பகுதிக்கு வந்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற பகுதியை நோக்கி செல்ல முயன்றனர். எனினும் பொலிஸார் அவர்களை தடுத்துநிறுத்தினர்.
அவர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேல் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை பார்த்து கோசங்களை எழுப்பினர்.
இலங்கையில் இராணுவம் பயங்கரவாதிகள் மீதே தாக்குதலை மேற்கொண்டது, இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளுடனேயே போரிட்டது,இவர்கள் இங்கு நினைவேந்தலில் ஈடுபடுவது வெட்கமாக உள்ளது, இவர்கள் கள்ளப்புலிகள் என அவர்கள் தொடர்ந்து கோசம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
நினைவேந்தலில் ஈடுபட்டவர்கள் நிகழ்வு முடிவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை அவர்களை நோக்கி கொட்டியா, டயஸ்போரா என கோசமிட்டதையும் அவதானிக்க முடிந்தது.