சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளை. முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

19 வைகாசி 2025 திங்கள் 07:02 | பார்வைகள் : 196
கவர்னர் ரவிக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு தொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, 14 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு நீதிமன்றத்திடம் பதில் கேட்டுள்ளார். அதை எதிர்க்க வேண்டும்' என, எட்டு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியை பாதுகாக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும்' என, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தனர்.
கண்டனம்
இது தொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, 14 கேள்விகள் எழுப்பி, அவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதில் முக்கியமாக, அரசியல் சாசனத்தில், ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் நிர்ணயிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
இதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்; அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதை எதிர்க்க வேண்டும் என, மேற்கு வங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர்களுக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அவரது கடித விபரம்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அரசின் ஆலோசனைபடி கடந்த 13ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143வது பிரிவின் கீழ், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் முன், 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு அனுப்பி உள்ளார்.
இந்தக் குறிப்பு, எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பிடவில்லை. எனினும், கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குவதே இதன் நோக்கம்.
தமிழக அரசு பெற்ற தீர்ப்பு, தமிழகத்திற்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தும். இது, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலை நிறுத்துவதாக அமைந்துள்ளது.
வீட்டோ அதிகாரம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநில சட்டசபைகளால் இயற்றப்படும் சட்டங்கள், மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னரால் தடைபடுவதை தடுக்கும் வகையில் உள்ளது. தமிழக கவர்னருக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி உள்ளது.
அதன்படி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, இரண்டாம் முறை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது, கவர்னர் நிறுத்தி வைக்க முடியாது. ஜனாதிபதி மற்றும் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பின் கீழ், மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில், மத்திய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்கிறது.
இந்த தீர்ப்பை சீர்குலைக்க, பா.ஜ., முயற்சிக்கிறது. பா.ஜ., அரசு தன் சூழ்ச்சியின் முதல் அங்கமாக, ஜனாதிபதியை உச்ச நீதிமன்றத்தில், ஒரு பரிந்துரை பெற அறிவுறுத்தி உள்ளது. இது, அவர்களின் தீய நோக்கத்தை குறிக்கிறது.
இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சி தத்துவத்தையும், மாநில சுயாட்சி கொள்கையையும் காத்திடும் நோக்கம் உடைய, பா.ஜ.,வை எதிர்க்கும் மாநில அரசுகள், மாநில கட்சி தலைவர்கள், அரசியலமைப்பை பாதுகாக்கும் சட்டப்போராட்டத்தில் இணையவும்.
தலையீடு
உச்ச நீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு, ஜனாதிபதி அனுப்பியுள்ள குறிப்பை, நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.
நீதிமன்றம் முன், நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இப்பிரச்னையில் உங்களின் தனிப்பட்ட தலையீட்டை உடனடியாக எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.