டாஸ்மாக் ஊழல் விவகாரம் அடுத்து சிக்கப்போவது யார்?

19 வைகாசி 2025 திங்கள் 10:02 | பார்வைகள் : 182
டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக, அதன் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் வீடுகளில், சோதனையை நிறைவு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகரிகள், அங்கு சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வருவதுடன், மேலும் ஒரு முக்கிய புள்ளிக்கும் குறி வைத்துஉள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும், 1,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, கடந்த இரு தினங்களாக, சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விசாகன் வீட்டருகே கிழித்து வீசப்பட்ட ஆவணம் ஒன்றில், 'அன்பு தம்பி' என, குறிப்பிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடு குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த துறையின் முன்னாள் அமைச்சர், நிதி மற்றும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி தான், டெண்டர் செயல்முறை வெளியிடப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் தி.மு.க.,வினர் தான் பயனடைந்துள்ளனர். சில இடங்களில் கட்சிக்குள் பிரச்னைகள் எழுந்தன.
சட்டவிரோத டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன என்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. யார் யாரிடம் எத்தகைய மது பானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட குறிப்புகளும் கிடைத்துள்ளன.
ஆவணத்தில் இருந்த உரையாடல்கள், சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில் வசித்து வரும், தொழில் அதிபர் ரத்தீஷ் மற்றும் விசாகன் இடையே நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் மதுபானக் கூடம் டெண்டர் விவகாரத்தில் ரத்தீஷ் தலையீடு அதிகம் இருந்துள்ளது.
இதனால், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அவருக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர், எம்.ஆர்.சி., நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, 'டீலிங்' பேசும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி, ரத்தீஷிடம் விசாரிக்க உள்ளோம்.
அதேபோல, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சினிமா பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதிலும், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில், விரைவில் ஒரு முக்கிய புள்ளி சிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.