XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (பகுதி -1)
24 வைகாசி 2016 செவ்வாய் 15:23 | பார்வைகள் : 20572
பிரெஞ்சு தேசம் எதற்கெல்லாமோ பிரபல்யம்... காமிக்சுக்கும் தான். சிறு சிறு கட்டங்களுக்குள் ஓடித்திரியும் கதாநாயகர்களோடு நாமும் சேர்ந்து ஓடித்திரிந்த காலங்கள் என்றும் நரைக்காதவை! 'இந்தா வாங்கிக்கொள்.. கும்..' என மாயாவி விடும் 'பஞ்ச்' ஒன்றில் எதிராளியின் முகத்தில் மண்டையோடு முத்திரை பதியும் போது ஆரவாரம் ஆர்ப்பரிக்கும். மனுஷன் போக முடியாத இடத்துக்கெல்லாம் மனத்தை கூட்டிச்சென்றது காமிக்ஸ்!
உலகம் முழுவதும் உள்ள காமிக்ஸ் ரசிகர்களுக்கு பரீட்சயமான பெயர் தான் இந்த பதின்மூன்று! (XIII) 'சூப்பர் ஹீரோ'க்களை வைத்து அடாவடி செய்த மார்வல் (அமெரிக்கா) காமிக்ஸின் தலையெழுத்தை அடியோடு பெயர்த்தெடுத்த பிரெஞ்சு கதாநாயகன். அவன் பின்வருமாறு உருவாகிறான்:
பெல்ஜியத்தின் ப்ரூஸ்லெஸ் நகரில் பிறந்தவர்தாம் கதாசிரியர் வான் ஹாம் (Jean Van Hamme). பொருளியல் மற்றும் மேலாண்மை படித்துவிட்டு அதற்கு சம்மந்தம் இல்லாமல் பத்திரிகையாளராக வேலை பார்த்தார். அதை தொடர்ந்து 'பிலிப்ஸ்' நிறுவனத்தில் விநியோக துறையில் வேலை பார்த்தார். சிறுவயது முதலே இவருக்கு பெல்ஜிய எழுத்தாளர் Paul Cuvelierஇன் எழுத்துக்கள் மேல் பெரும் பாதிப்பு இருந்தது. அதன் தாக்கத்தில் 1968ஆம் ஆண்டு எழுத தொடங்குகிறார். அடுத்த பத்து வருடங்களில் வான் ஹாம் முழு நேர எழுத்தாளராகிவிட்டார்.
வான் ஹாம் முதலில் உருவாக்கிய நாயகன் 'தோர்கல்'. அவன் ஒரு மாவீரன். மாயாஜால உலகம் அவனுடையது. பின்னர் அந்த நாயகன் டானிஷ், ஆங்கிலம், கிரேக்கம், ஃபின்னிஷ், ஜெர்மன், கிரேக்கம், போலிஷ், ஸ்வாதிஷ், துருக்கி என அளவு கணக்கில்லாமல் மொழி பெயர்ந்தான். அதை விட்டுவிடுவோம்.
அதன் பின் வான் ஹாம் உருவாக்கிய கதாநாயகன் தான் XIII. கதையை தயார் செய்து விட்டு ஓவியர் வில்லியம் வான்ஸ் வீட்டு கதவை தட்டுகிறார் எழுத்தாளர் வான் ஹாம்! எழுந்து வந்து எதிர்காலத்தின் கதவை திறந்தார் ஓவியர் வான்ஸ்.
1935 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்த வில்லியம் வான்ஸ் ஆரம்பத்தில் இராணுவத்தில் பணிபுரிந்தார். அதன் பின்னர் ஓவிய படிப்பு படித்து முடித்து 'பிரெஞ்சு - பெல்ஜிய' கூட்டுத்தயாரிப்பான 'டின் டின்' காமிக்ஸ் பத்திரிகையில் ஓவியராக பணி புரிந்தார். சவால்கள் இல்லாத வேலை. Howard Flynn, Ringo, Roderik என கார்ட்டூன்களுக்கு ஓவியம் போட்டுக்கொண்டிருந்தவர், ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்தார்.
அப்போது அவருக்கு 'ப்ரூனோ பிரேசில்' எனும் 'முதலைப்பட்டாள'த்திற்கு ஓவியம் வரையும் வாய்ப்பு கிடைத்தது. டின் டின் பத்திரிகையின் ஆசிரியர் கிரேக் உருவாக்கிய கதை அது. அந்த ஓவியத்துக்கு மிக அழகான... தத்ரூபமான ஓவியங்களை உற்சாகமாக வரைந்தார். அந்த வாய்ப்பு தான் பின்நாளில் வான் ஹாமை வீடு தேடி வர செய்தது!!
'பதின்மூன்று' உருவாகிறான்.... (தொடரும்)