தேவதைகளால் ஒரு திருட்டு!! - 100 மில்லியன் கொள்ளை!!
17 வைகாசி 2016 செவ்வாய் 11:13 | பார்வைகள் : 20274
உலகின் நடந்த மோசமான, நூதனமான, வித்தியாசமான திருட்டு எல்லாம் பிரான்சில் தான் நடைபெற்றிக்கும் போல்; பரிஸ் நகரத்தில் தேவதைகளால் ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றது. எட்டு வருடங்களுக்கு முன்னே....
பரிசின் புகழ்பெற்ற நகை கடை Harry Winston. தங்கம், வைரம், வைடூரியம்.. விலை அதிகம் கொண்ட கைக்கடிகாரங்கள் என கரன்சிகள் அதிகம் கொண்ட கட்டிடம் அது! அன்று டிசம்பர் 5, 2008. கடை சாத்தப்படும் நேரம். துப்பாக்கிகள் சகிதம் நான்கு கொள்ளையர்கள் உட்புகுந்தனர்.
அந்த நால்வரில், மூவர் தேவதைகள் போல் உடை அணிந்திருந்தார்கள். முதுகில் சிறகுகள்... கையில் ஆயுதங்கள்!
கடையின் தொலைபேசி, இணைய தொடர்பை நீக்கிவிட்டு உள் நுளைந்த கொள்ளையர்கள், 'ஷோ கேஸ்'-இல், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளை அடித்தார்கள். அதுவே பல மில்லியன் பெறுமதி. ஆனால் அவர்களுக்கு அது பத்தவில்லை. அங்கிருக்கும் பணியாளர் ஒருவரிடம் நகை கிடங்கு எங்கே இருக்கிறது என கேட்டு... அங்கும் நுழைந்தார்கள். அங்கிருக்கும் அத்தனை நகைகள், கடிகாரங்கள் அத்தனையும் வாரி சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்கள். துப்பாக்கியை பிரயோகிக்காமல் நடந்த மாபெரும் கொள்ளை அது. திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள். அடுத்த நாள் Harry Winston - இன் பங்கு 9% சரிந்தது.
ஆனால் கதையின் திருப்பம் இதுவல்ல.., இந்த சம்பவத்திற்கு வெள்ளோட்டமாக... ஒரு வருடத்திற்கு முன்னர்.. அதாவது 2007ல் ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றது. அந்த திருட்டின் போது 10 மில்லியன் பெறுமதியான நகைகள் திருட்டு போனது. அப்போது தான் திருடர்களுக்கு தெரிய வந்தது.. இந்த கடைக்கு 10 மில்லியன் என்பது மிக குறைந்த அளவு என்பது. அதன் பின்னர் தான் இந்த தேவதைகளின் திருட்டு இடம்பெற்றது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இதுவரை 25 பேர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 22 வயது தொடக்கம் 67 வயதுடவர்கள் அடக்கம் என தெரிவிக்கப்படுகிறது. திருடுவதற்கு வயது பாகுபாடு இல்லை என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.