திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க..

21 வைகாசி 2025 புதன் 14:16 | பார்வைகள் : 149
பரபரப்பான வேலை நாட்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் உறவுகளை சிக்கலின்றி கொண்டு செல்வது என்பது இந்த நவீன காலத்தில் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக தங்கள் தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை தம்பதியர் எதிர்கொண்டு வருவதால், திருமண உறவை சுமுகமாக கொண்டு செல்வது என்பது உண்மையில் கடினமான ஒன்றாக மாறியுள்ளது. இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தம்பதியர் இடையே இடைவெளி ஏற்பட மோதலை தவிர பல நேரங்களில் பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாக சரிவர பேசிக்கொள்ள கூட நேரம் ஒதுக்க முடியாமல் போவதும் முக்கியமான காரணமாக உள்ளது. உங்கள் திருமண உறவில் இதனால் பிரச்சனைகள் ஏற்படுகிறதென்றால் சிறிய அதே சமயம் தொடர்ச்சியான முயற்சிகள் உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க உதவ கூடும். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் நீங்க; பின்பற்ற வேண்டிய எளிமையான அதே நேரம் அர்த்தமுள்ள 5 தினசரி பழக்கவழக்கங்கள் இங்கே.
அலுவலகத்தில் இருந்து வந்த பின்.. உங்களது வேலை நாள் எப்படி சென்றாலும் மாலையில் வீட்டிற்கு வந்த உடன் உங்கள் துணையை பார்த்த பின் நீங்கள் கட்டிப்பிடித்து அரவணைப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சில வினாடி கட்டிப்பிடித்து அரவணைப்பது என்பது வாயை திறந்து எதுவும் சொல்லாமல் "நீ பாதுகாப்பாக இருக்கிறாய்" என்று கூறுவதற்கு சமமாகிறது. இது ஒரு சிறிய பழக்கம் தான், ஆனால் காலப்போக்கில், அது உங்கள் திருமண உறவை மேலும் நெருக்கமாக உணர உதவுகிறது.
இரவு நேர பேச்சு: இரவு உணவுக்கு பிறகு நீங்கள் முமுமையாக் ரிலாக்ஸாக உணரும் போது, எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை துணையுடன் பேச சில நிமிடங்கள் நேரம் ஒதுக்குங்கள். உங்களது அன்றைய நாள் எப்படி இருந்தது, உங்கள் மனதில் என்ன இருந்தது உள்ளிட்ட சில பொதுவான விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவருக்கும் பேச வாய்ப்பு கொடுங்கள். தினசரி இப்படி இரவு நேர உரையாடலில் ஈடுபடுவது உண்மையில் திருமண உறவில் நம்பிக்கை மற்றும் நெருக்கத்தை வளர்க்க உதவும்.
காலையில் நீங்கள் கேட்க வேண்டியது... காலை எழுந்ததும் நீங்கள் அல்லது உங்கள் துணை அன்றைய நாளில் மேற்கொள்ள உள்ள செயல்கள் மற்றும் திட்டங்களை பற்றி பராஸ்பரம் காகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருவருக்குமான தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவை வழங்கவும் உதவியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையிடம் அவர்களிடம் அன்றைய நாளைப் பற்றிக் கேட்பது வெறும் சிறிய பேச்சு அல்ல - அது உங்களுக்கு அவர்கள் மீது அக்கறை இருப்பதை காட்டுகிறது.
குட் மார்னிங் சொல்லுங்கள்: காலை எழுந்ததும் மனமார “காலை வணக்கம்” அல்லது வெளியே செல்லு முன் அன்பாக “பை, டேக் கேர்” என்று சொல்வது பெரிய விஷயமாக இல்லாதது போல தோன்றலாம், ஆனால் இதை தினசி அன்போடு சொல்லும் போது அவை உங்கள் உறவை அர்த்தமுள்ளதாக வைக்கும். இந்த எளிய வார்த்தைகள் உங்கள் உறவில் அக்கறையை வெளிப்படுத்துகிறது. பரபரப்பான நாட்களில் கூட உங்கள் உறவு மதிப்புமிக்கது என்பதை உங்கள் துணைக்கு நினைவூட்டுகின்றது.
நேர்மறையான தருணம்: இரவு உறங்க செல்வதற்கு முன் உங்களின் அன்றைய நாளில் நடந்த ஒரு நல்ல விஷயத்தை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வதை தினசரி பழக்கமாக்கி கொள்ளுங்கள். உங்கள் நாளை இருவரும் சேர்ந்து ஒன்றாக நேர்மறையாக நிறைவு செய்ய இது ஒரு எளிய வழியாகும்.