Paristamil Navigation Paristamil advert login

துணைவேந்தர்கள் நியமன அதிகாரம்; தமிழக அரசு சட்டத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

துணைவேந்தர்கள் நியமன அதிகாரம்; தமிழக அரசு சட்டத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

22 வைகாசி 2025 வியாழன் 06:01 | பார்வைகள் : 121


பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறித்து தமிழக அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கவர்னர், நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பதாக, அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், பல்கலை துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கும் மசோதா உள்பட 10 சட்டமசோதாக்களுக்கு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னரிடம் இருந்து தமிழக அரசுக்கு சென்றது. இதை எதிர்த்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பா.ஜ., மாவட்ட செயலாளரும், வக்கீலுமான வெங்கடாசலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். யு.ஜி.சி., விதிகளுக்கு எதிராக இந்த சட்டப்பிரிவுகள் இருப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசின் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  ஏற்கனவே பல்கலை துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். 10ல் இரு பல்கலை மட்டுமே துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளன.

மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது நியாயமற்றது. எனவே, அவசரகதியில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது,' என வாதிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறித்து அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனிடையே, துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்