'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Guillaume Musso!!
9 வைகாசி 2016 திங்கள் 12:20 | பார்வைகள் : 18851
Guillaume Musso - இந்த பெயர் இன்றைய இளைஞர்கள் மத்தியிலும், இலக்கிய வட்டங்கள் மத்தியிலும் புகழ்பெற்ற பெயராகும். இவர் ஒரு நாவலாசிரியர். பிரான்சில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 'L'Appel de l'ange' நாவலை எழுதியர் இவர். இவரைப்பற்றிய மேலும் சில தகவல்கள்!
ஜூன் மாதம், 6ம் திகதி 1974 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்தவர், தனது 19வது வயதில் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றார்.
ஆனால் அவர் உண்மையில் அமெரிக்காவில் ஐஸ்கிரீம் தான் விற்றார். அவருக்கு அந்த வேலையில் போதிய வருமானம் இல்லை என்பதால் மீண்டும் பிரான்சுக்கே வந்துவிட்டார்.
தன்னுடைய முதல் நாவலை 2001ஆம் ஆண்டு எழுதுகிறார். லூவர் அருங்காட்சியகத்தில் மோனலிசா ஓவியம் திருடப்பட்ட சம்பவத்தை சேர்ந்து ஒரு துப்பறியும் கதையை எழுதினார். Skidamarink எனும் அந்த நாவல் அவ்வளவு பிரபலமடையவில்லை அப்போது.
அதன் பின்னர் மிகப்பெரிய கார் விபத்தொன்றில் சிக்குகிறார் Musso. மரணத்தின் வாசல்வரைக்கும் சென்றுவிட்டு வந்த அவர், Afterwards எனும் நாவலை எழுதினார். அந்த நாவல் அத்தனை ஜீவனோட்டத்துடன் இருந்ததால் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றுத்தள்ளியது.
அத்தோடு நில்லாமல், Afterwards நாவல் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அதே பெயரில் 2009ஆம் ஆண்டு பிரெஞ்சு திரைப்படம் கூட வெளியானது.
தொடர்ந்து 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011 என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாவல்கள் எழுனார். அனைத்துமே அளவுகணக்கில்லாமல் விற்றுத்தீர்ந்தது. 2009ஆம் ஆண்டு, அதிக பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட எழுத்தாளர்களில், இரண்டாம் இடத்தில் இருந்தார் Musso.
2011ஆம் ஆண்டு L'Appel de l'ange (தேவதையிடமிருந்து அழைப்பு) நாவலை எழுதி வெளிட்டார். ஒரு கோடியே ஐம்பத்தாறு லட்சத்து, ஏழாயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்பனையாகின. இன்று பிரான்சின் அதிக பிரதிகள் விற்கப்பட்ட நாவலின் சொந்தக்காரர் இவர்.