கோவிட்-19 - பிரான்ஸில் புதிய ஆபத்தான கோவிட் வைரஸ்!

24 வைகாசி 2025 சனி 12:03 | பார்வைகள் : 646
NB.1.8.1 என்ற புதிய கோவிட்-19 மாறுபாடுடைய வைரஸ், முதல் முறையாக பிரான்ஸில் கண்டறியப்பட்டது. இது சீனாவில் கடுமையான பரவலை ஏற்படுத்திய ஆபத்தான வகையாகும்.
இந்த மாறுபாடு மார்ச் மாதத்திற்குப் பின் தான் பிரான்ஸில் தோன்றியது. மொத்தம் 4 பேர்களில் இது கண்டறியப்பட்டு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் இன்னும் எத்தனை பேரிற்குப் பரவியிருக்குமோ தெரியாது என்ற அச்சம் மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்த வைரசினால் சீனாவில் அவசர மருத்துவப் பிரிவுகளுக்கு வருவோர் அதிகரித்ததுடன், இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வைரஸ்தான் தற்போது பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வகை ஐரோப்பாவில் சில நாடுகளிலும் பரவியிருக்கிறது. பிரான்ஸில் குறைவாகவே இருப்பினும், மிகவும் அவதானமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய மாறுபாடுடைய வைரஸ் இது என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.