முதலாம் உலகப்போரில் பிரான்ஸ் பயன்படுத்திய 'அடேங்கப்பா!!' பீரங்கி!
2 வைகாசி 2016 திங்கள் 11:33 | பார்வைகள் : 19075
உலக நாடுகளுக்கு தாங்கள் தயாரித்த ஆயுதங்களை பயன்படுத்தி பார்க்கும் சந்தர்ப்பத்தை முதலாம் உலகப்போரும், இரண்டாம் உலகப்போரும் தாராளமாக வழங்கியது. உண்மையில் இரண்டு உலகப்போர்களும் முடிவுற்று, மில்லியன் கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டதன் பிற்பாடு தான் இது வெறும் 'அக்கப்போர்' என உலக நாடுகளுக்கு தெரியவந்தது. இது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த முதலாம் உலகப்போரின் போது பிரான்ஸ் ஒரு அதி நவீன பீரங்கி ஒன்றை பயன்படுத்தியது. அதை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
'Canon de 155 C' என்று அழைக்கப்படும் இந்த பீரங்கி ஒரு பிரான்ஸ் நாட்டு தயாரிப்பாகும். Saint-Chamond நிறுவனம் இந்த பீரங்கியை தயாரித்தது.
இந்த பீரங்கி மொத்தமாக 3,040 கிலோ எடையை கொண்டது. 2.517 மீட்டர்கள் நீளமுடைய குழாயை (baral) கொண்டுள்ளது. 43.5 கிலோகிராம் எடைகொண்ட வெடிகுண்டை, 9.3 கிலோ மீட்டர்கள் நீளத்திற்கு பறந்து சென்று வெடிக்குமாம்.
மெக்ஸிக்கோ நாட்டுக்காகத்தான் முதன் முதலாக இந்த பீரங்கியை பிரான்ஸ் தயாரித்தது. அதன் பின் ஜேர்மனி, ஃபின்லாந்து, ருமேனியா, சேபியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது. 1915 ஆம் ஆண்டு தொடக்கம், 1945 ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடியும் வரையான முப்பது வருடங்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது இந்த பீரங்கி.
இன்று பிரெஞ்சு அரசு வைத்திருக்கும் பீரங்கிகளோடு ஒப்பிட்டால், இந்த Canon de 155 C பீரங்கி, குறு குழந்தைகளின் விளையாட்டுப்பொருள் போன்றது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன் இந்த பீரங்கி, ராஜாவாக இருந்தது என்பதுதான் உண்மை!