Paristamil Navigation Paristamil advert login

உழைப்பாளர் தினம் - பிரான்சுக்கு எப்படி வந்தது??!

உழைப்பாளர் தினம் - பிரான்சுக்கு எப்படி வந்தது??!

1 வைகாசி 2016 ஞாயிறு 09:48 | பார்வைகள் : 22069


மே தினம் என அழைக்கப்படும் உழைப்பாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அது பிரான்சுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்தது. 
 
மே மாதம், முதலாம் திகதி (இன்று) உழைப்பாளர் தினம். பிரான்சில் ஒவ்வொரு உழைப்பாளர் தினத்திற்கும் அரசாங்க விடுமுறை. இந்த வருடத்தை தவிர. ஏனென்றால் இன்று ஞாயிற்றுக்கிழமை. அட பாவமே??! 
 
வருடம் முழுவதும் உழைக்கும் உழைப்பாளியை கெளரவிக்கும் முகமாக, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். பிரான்சிலும் அப்படித்தான். அண்டை நாடுகளில் எல்லாம் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்குவார்கள். ஆனால் பிரான்சில் ஒரே ஒரு நாள் தான் விடுமுறை. அந்த சோக கதை வேண்டாமே!!
 
மே தினம் உண்மையில் ஒரு காதலர் தினம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா??! பிரான்சின் King Charles IX மன்னன், மே மாதம் முதலாம் திகதி, 1561ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண்களுக்கு 'லில்லி' மலர்களை அன்பு பரிசாக வழங்கினான். 
 
பின்னர் இந்த நிகழ்வு வருடா வருடம் நிகழலாயிற்று. காலப்போக்கில் பிரெஞ்சு ஆண்மக்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தமான பெண்களுக்கு 'லில்லி' மலர்களிலான பூங்கொத்தை பரிசாக கொடுக்க ஆரம்பித்தார்கள். 
 
இது ஒருபுறம் இருக்க, பிரான்சில் April 23, 1919 ஆம் ஆண்டு, எட்டுமணி நேர வேலை கட்டாயமாக்கப்பட்டது. அப்போது மே மாதம் முதலாம் திகதி உழைப்பாளர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1948 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஏப்ரல் 29ம் திகதி, உழைப்பாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உலகத்திற்கு பொதுவான நாளாக 'உழைப்பாளர் தினம்' மாறிவர, ஏப்ரல் 29ம் திகதியில் இருந்து, மே மாதம் முதலாம் திகதிக்கு இடம்பெயர்ந்தது. 
 
அதெல்லாம் சரி... இதற்கும் மேலே சொல்ல 'லில்லி' மலர் கதைக்கும் என்ன சம்மந்தம்??!  சம்மந்தம் இருக்கிறது.  பிரான்சில் மே மாதம் முதலாம் திகதி ஆண்கள், தங்களுக்கு பிடித்த பெண்களிடம் லில்லி மலர்களை கொடுப்பதாக சொன்னோம் இல்லையா??! 
 
அதனால் உழைப்பாளர் தினத்தை  ' Fête du Muguet' என பிரெஞ்சில் அழைக்கிறார்கள். Muguet என்றால் ஆங்கிலத்தில் லில்லி மலர் என அர்த்தம்! 
 
காதலும், உழைப்பின் பெருமையும் ஒரு சேர இணையும் இந்த மே மாதம் முதலாம் திகதி, அனைத்து உழைப்பாளர்களுக்கும் பெருமையான நாள் தானே??! 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்