Paristamil Navigation Paristamil advert login

மேற்கத்திய நாடுகளின் கொலைப்பட்டியலை தயாரிக்கும் ரஷ்யா

மேற்கத்திய நாடுகளின் கொலைப்பட்டியலை தயாரிக்கும் ரஷ்யா

1 வைகாசி 2025 வியாழன் 12:31 | பார்வைகள் : 163


மேற்கத்திய நாடுகளின் எம்.பி.க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட கொலைப்பட்டியல் ஒன்றை ரஷ்யா தயாரித்து வருவதாக அந்த நாட்டில் இருந்து வெளியேறியுள்ள, அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கும் நபர்களை அடையாளம் காணும் பொருட்டு உளவாளிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளதாக Mikhail Khodorkovsky என்பவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் அரசியல் செல்வாக்கு மிகுந்த கோடீஸ்வரர்களில் Mikhail Khodorkovsky-உம் ஒருவர். ஆனால் புடினின் கோபத்திற்கு ஆளான Mikhail Khodorkovsky நீண்ட பத்தாண்டுகள் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவரே தற்போது தமக்கு கிடைத்துள்ள ரகசிய தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். ஐரோப்பா முழுவதும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிகுந்த நபர்களின் கொலைப்பட்டியலை புடினின் உளவாளிகள் உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் இயங்கும் ரஷ்ய உளவாளிகளிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அவர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக முகவரிகளையும் கண்டுபிடிக்க பணிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை என்பது உண்மையான மற்றும் உடனடியான அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்ய அரசாங்கம் தொடர்பில் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு உளவுத்துறையின் இந்த நடவடிக்கை குறித்தும் புரிந்துகொள்ள முடியும் என்றார்.

இதனிடையே, ரஷ்ய தேடப்படும் பட்டியலில் உள்ள குறைந்தது இரண்டு ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட தகவல்களைத் தேடும் ரஷ்ய உளவாளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் MI6 ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன், ரஷ்ய உளவாளிகள் ஐரோப்பா முழுவதும் தீவிரமாக வேலை செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், தாக்குதல்களை நடத்த ரஷ்யா அடியாட்களை வேலைக்கு அமர்த்துவதாக MI5 உளவுத் தலைவர் கென் மெக்கலம் எச்சரித்துள்ளார். மட்டுமின்றி தீ வைப்பு, நாசவேலை உட்பட பல திட்டங்களை ரஷ்யா முன்னெடுக்கலாம் என்றும் கென் மெக்கலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே, உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதியை முன்னெடுக்கும் ஜேர்மனியின் Rheinmetall நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை கொலை செய்ய ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் ஜேர்மன் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தற்போது லண்டனில் வசித்துவரும் Khodorkovsky தெரிவிக்கையில், ரஷ்யா தீவிர வலதுசாரி குழுக்கள் அல்லது வெளிப்படையான குற்றவியல் அமைப்புகளை பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்