சென் நதியில் 1,000 லிட்டர் டீசல் கசிவு: மீன்பிடி மற்றும் படகு சவாரிக்கு தடை!

1 வைகாசி 2025 வியாழன் 22:49 | பார்வைகள் : 374
Seine-et-Marne பகுதியின் Luzancy நகரத்தில் உள்ள Wiame Fils நிறுவனத்தில் புதிதாக நிறுவப்பட்ட டீசல் குவளையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 1,000 லிட்டர் டீசல் Marne நதிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை கசிந்துள்ளது.
இந்த சிவப்பு நிறம் கொண்ட டீசலானது விவசாய மற்றும் கட்டிட இயந்திரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் வகையாகும். கசிவைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். மிதக்கும் தடுப்புகள் மற்றும் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் கருவிகள் நதியில் பொருத்தப்பட்டன. மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக நதிக்கரைகளில், படகு சவாரி மற்றும் மீன்பிடி, மே 5 வரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இதன் தாக்கங்களை பற்றி கவலை தெரிவித்து உள்ளனர். குறிப்பாக மீன்களின் இனப்பெருக்க காலத்தில் இது நிகழ்ந்துள்ளமை கவலை அளித்துள்ளது.
நிலத்தடியில் மாசுபாடு இல்லை என சுற்றுச்சூழல் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ள நிலையில், நதி நீரில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், டீசல் சாயம் நீரில் தென்படுவதாகவும் உள்ளூர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.